குட்டிமணி, தங்கத்துரை ஆகியோரின் சிலை அமைப்புக்கான தடை நீக்கம்
வெலிக்கடைச் சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்ட ரெலோ அமைப்பைச் சேர்ந்த குட்டிமணி, தங்கத்துரை ஆகியோரின் சிலையையும், அங்கு கொல்லப்பட்ட 53 பேருக்கான நினைவுத் தூபியையும் நிறுவுவதற்குப் பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவு நேற்று புதன்கிழமையுடன் நீக்கப்படுகின்றது என்று நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது.
கடந்த ஜூலை 25 அன்று தியாகிகள் குட்டிமணி, தங்கத்துரை ஆகியோரது 43ஆவது நினைவு நாளில் சிலை நிறுவுவதற்குரிய ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. இதற்கிடையில், கடந்த ஜூலை 22 அன்று வல்வெட்டித்துறை நகர சபையின் முன்னாள் உப தவிசாளர் கந்தசாமி சதீஷ் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டுப் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், நேற்று புதன்கிழமை வரை சிலை நிறுவத் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், வழக்கு நேற்று பருத்தித்துறை நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது பொலிஸாருடன் ஆஜரான அரச சட்டத்தரணி, புலனாய்வு அறிக்கை சமர்ப்பிப்பதற்காக மேலும் 14 நாள் தடை உத்தரவைக் கோரினார்.
எனினும், குற்றவியல் 106ஆம் பிரிவின்படி 14 நாள்களுக்கு மட்டுமே தடை உத்தரவை வழங்கலாம் எனவும், அதற்கு மேல் நீடிப்பதாக இருந்தால் அமைச்சர் ஒருவரால் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டு வெளியிடப்பட வேண்டும் எனவும் எதிர்தரப்புச் சட்டத்தரணிகள் வாதிட்டனர்.
அதனை அரச சட்டத்தரணி ஏற்றுக்கொண்டதுடன், நேற்றுடன் அந்த 14 நாள் காலம் முடிவடைவதையும் மன்றின் கவனத்துக்குக் கொண்டுவந்தார்.
இதனை ஆராய்ந்த நீதிவான், தற்காலிகமாக விதிக்கப்பட்டிருந்த தடை நேற்றுடன் முடிவடைவதாகக் குறிப்பிட்டதுடன், வேறு விண்ணப்பங்கள் எவையேனும் இருப்பின் சமர்ப்பிக்கலாம் என உத்தரவிட்டிருந்தார்.
இதன்போது வல்வெட்டித்துறை பொலிஸார் தடை நீக்கத்துக்கு ஆட்சேபம் தெரிவிக்கவில்லை. எனினும், வழக்கின் எதிரியான சதீஷின் பணப் பரிமாற்ற விவரங்களை அறிந்துகொள்வதற்காக அவரது வங்கிக் கணக்கு விவரங்களைப் பெற்றுக்கொள்ள மன்று அனுமதி வழங்க வேண்டும் என்று பொலிஸார் விடுத்த கோரிக்கையை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.
இந்த வழக்கின் அடுத்த தவணை எதிர்வரும் பெப்ரவரி மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
வல்வெட்டித்துறை பொலிஸாரால் குற்றம் சாட்டப்பட்ட கந்தசாமி சதீஷ் சார்பாக விஸ்வலிங்கம் மணிவண்ணன் உட்பட ஐவரடங்கிய சட்டத்தரணிகள் குழுவினர் மன்றில் முன்னிலையாகியிருந்தனர்.




