200 ஆண்டுகள் சிறை தண்டனைக்கு மத்தியில் கென்ய மதக்குழுத் தலைவர்மீது மீண்டும் குற்றவாளித் தீர்ப்பு
கென்யாவில் சுமார் 200 பேரின் உயிரிழப்புக்குக் காரணமானதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு, ஏற்கனவே 200 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள மதக்குழுத் தலைவர் போல் மெக்கன்சி (Paul Mackenzie), சிறுவர்கள் மீதான கொடுமை மற்றும் தாக்குதல் உள்ளிட்ட புதிய குற்றச்சாட்டுகளிலும் குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளார்.
கென்யாவின் மொம்பாசா நகரிலுள்ள டோனோனோகா சிறுவர் நீதிமன்றம் புதன்கிழமை (25) இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.
குட் நியூஸ் இன்டர்நெஷனல் தேவாலயத்தை வழிநடத்திய போல் மெக்கன்சி, உலகம் அழியப்போவதாகவும், அதற்கு முன்னர் சொர்க்கத்தை அடைவதற்கு உண்ணாவிரதம் இருக்க வேண்டும் என்றும் தன்னைப் பின்பற்றியவர்களுக்கு போதித்துள்ளார்.
இதன் காரணமாக, தங்களைப் பின்பற்றியவர்களையும் அவர்களின் குழந்தைகளையும் உணவு உட்கொள்ளாமல் இருக்குமாறு அவர் வலியுறுத்தியதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கில் சிறுவர்களைக் கொடுமைப்படுத்திய ஐந்து குற்றச்சாட்டுகள் மற்றும் தாக்குதல் மூலம் உடல் பாதிப்பை ஏற்படுத்திய ஒரு குற்றச்சாட்டு என மொத்தம் ஆறு குற்றச்சாட்டுகளில் அவர் குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளார்.
ஏனைய சில குற்றச்சாட்டுகளில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளார். குறிப்பாக, சிறுவர்களைச் சித்திரவதை செய்ததாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டிலிருந்தும் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இந்த வழக்கில் குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ள மெக்கன்சிக்கு எதிரான தண்டனை பின்னர் அறிவிக்கப்படவுள்ளது.
கடந்த 2023ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கென்யாவின் கடலோரப் பகுதியிலுள்ள ஷகஹோலா வனப்பகுதியில் பலரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்தச் சம்பவம் சர்வதேச கவனத்தைப் பெற்றது.
இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகளில் இதுவரை 400க்கும் அதிகமான உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் சிறுவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மெக்கன்சி மீது பயங்கரவாதம், தீவிரவாதப் போதனை மற்றும் பாரிய உயிரிழப்புகளை ஏற்படுத்தியமை உள்ளிட்ட மேலும் பல குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்குகளும் நிலுவையில் உள்ளன.
மத அமைப்புகளின் செயற்பாடுகளைக் கண்காணிப்பதற்கான கடுமையான சட்டங்கள் அவசியம் என்ற கோரிக்கைகளும் இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து கென்யாவில் வலுப்பெற்றுள்ளன.




