2027 ஒருநாள் உலகக்கோப்பை:12 மைதானங்களை உறுதி செய்தது ஐசிசி
24 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தென்னாப்பிரிக்க பிராந்தியத்தில் நடைபெறவுள்ள 2027 ஆடவர் ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கான 12 (Host) நகரங்களை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) உறுதி செய்துள்ளது.
மொத்தம் நடைபெறவுள்ள 54 போட்டிகளில் பெரும்பாலான போட்டிகள் தென்னாப்பிரிக்காவின் ஜோஹன்னஸ்பர்க், செஞ்சுரியன், டர்பன், கெபர்ஹா, குகொம்போ சிட்டி, கேப் டவுன், பார்ல் மற்றும் புளோம் போன்டைன் ஆகிய எட்டு நகரங்களில் நடைபெறவுள்ளன.
இறுதிப்போட்டி ‘வாண்டரர்ஸ்’ அல்லது ‘நியூலேண்ட்ஸ்’ மைதானத்தில் நடத்தப்படும்.
சிம்பாப்வேயின் ஹராரே, புலவாயோ மற்றும் விக்டோரியா பால்ஸ் ஆகிய நகரங்களில் 7 முதல் 10 போட்டிகள் வரை நடைபெறும். மேலும், நமீபியாவின் விண்ட்ஹோக் நகரம் குறைந்தது மூன்று போட்டிகளை நடத்தும்.
இவற்றில், பல ஆண்டுகளுக்கு முன்பு ஒப்புக்கொள்ளப்பட்ட ஆரம்பகட்ட மைதானங்களின் பட்டியலுக்குப் பிறகு ‘விக்டோரியா பால்ஸ்’ மட்டுமே புதிய சேர்க்கையாகும்.
அந்நகரத்தின் புதிய 10,000 இருக்கைகள் கொண்ட மைதானம் இந்த ஆண்டின் பிற்பகுதியில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் 2027 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் சர்வதேச போட்டிகளுக்காக இது அதிகாரப்பூர்வமாக திறக்கப்படலாம்.
பெனோனி மற்றும் போட்செஃப்ஸ்ட்ரூம் ஆகியவை பயிற்சி போட்டிகளுக்கான மைதானங்களாகப் பயன்படுத்தப்படும். மேலும், நமீபியாவுடன் இணைந்து உலகக்கோப்பை தகுதிச் சுற்றுப் போட்டிகளையும் இவை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆப்பிரிக்காவில் 24 ஆண்டுகளுக்குப் பிறகு ஒருநாள் உலகக்கோப்பை மீண்டும் நடைபெறுகிறது.
இதற்கு முன்பு 2003 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்கா, சிம்பாப்வே மற்றும் கென்யா ஆகியவை இணைந்து இந்தத் தொடரை நடத்தின. அதன்பின்னர், தென்னாப்பிரிக்கா 2007 இல் முதலாவது ஆடவர் டி20 உலகக்கோப்பை, 2023 இல் மகளிர் டி20 உலகக்கோப்பை மற்றும் ஆடவர்/மகளிர் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பைத் தொடர்களை நடத்தியுள்ளது. நமீபியா முதன்முறையாக மூத்த அணிகளுக்கான ஐசிசி தொடர் ஒன்றை நடத்தவுள்ளது.




