ஈரானில் கடும் பொருளாதார நெருக்கடி: திண்டாடும் மக்கள்
அமெரிக்காவுடனான போர் எட்டாவது மாதமாகத் தொடரும் நிலையில், ஈரானில் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பால் அந்நாட்டு மக்கள் பெரும் பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.
உணவுப் பொருட்கள் மற்றும் வீட்டு வாடகைகளின் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளதுடன், மக்களின் கொள்வனவு சக்தியும் வீழ்ச்சியடைந்துள்ளது.
இதனால், அதிகரித்து வரும் வேலையின்மை மற்றும் சேமிப்புகள் குறைந்து வருதல் போன்ற நெருக்கடிகளுக்கு மத்தியில், மில்லியன் கணக்கான மக்கள் அத்தியாவசியத் தேவைகளுக்கான செலவுகளைக் குறைக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
ஈரான் ஊடகங்கள் வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ தரவுகளின்படி, கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு செப்டெம்பர் மாதத்தில் நுகர்வோர் பொருட்களின் விலைகள் சுமார் 90 சதவீதத்தால் அதிகரித்துள்ளன.
இதேவேளை, கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு செப்டெம்பர் மாதத்தில் வீட்டு வாடகைகள் 32.8 சதவீதத்தால் அதிகரித்துள்ளன. மின்சாரம் உள்ளிட்ட பயன்பாட்டுச் சேவைகள் மற்றும் எரிபொருட்களின் செலவுகளும் சுமார் 38 சதவீதத்தால் உயர்ந்துள்ளன.
இதற்கிடையில், வருடாந்த பணவீக்க வீதம் 73.6 சதவீதமாக அதிகரித்துள்ளது. கடந்த பல தசாப்தங்களில் ஈரான் எதிர்கொண்ட மிகக் கடுமையான விலை உயர்வுகளில் ஒன்றாக இது கருதப்படுகிறது.
உணவு மற்றும் பானப் பொருட்களின் விலைகளே மிக அதிகளவில் உயர்ந்துள்ளன. கடந்த ஆண்டு இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில், இவற்றின் விலைகள் 121.8 சதவீதத்தால் அதிகரித்துள்ளன.
இதன் காரணமாக, குடும்பங்கள் தமது செலவினங்களுக்கு முன்னுரிமை அளிக்கும் முறையை மாற்றியமைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, உணவுச் செலவுகளைச் சமாளிப்பதற்காகக் கல்வி, சுகாதாரம் மற்றும் ஏனைய அத்தியாவசியத் தேவைகளுக்கான செலவுகளைக் குறைக்க வேண்டிய நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியின் தீவிரத்தை உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொண்ட ஈரானிய பொருளாதார அமைச்சர் செயத் அலி மதனிசாதே, அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுச் சுமைகள் தொடர்பில் செவ்வாய்க்கிழமை பொதுமக்களிடம் மன்னிப்புக் கோரியுள்ளார்.
விலைவாசி உயர்வின் கடுமையான பாதிப்புகளைத் தொழிலாளர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் அரச ஊழியர்களே அதிகளவில் எதிர்கொள்வதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.




