பல்கலை விரிவுரையாளர்கள் நாளை தொழிற்சங்க நடவடிக்கை
பல்கலைக்கழகக் கட்டமைப்பில் நிலவும் தீர்க்கப்படாத பல்வேறு பிரச்சினைகளைக் முன்வைத்து, நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து அரச பல்கலைக்கழகங்களிலும் நாளை (30) ஒருநாள் பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ளதாக பல்கலைக்கழக விரிவுரையாளர் சங்கங்களின் சம்மேளனம் (FUTA) அறிவித்துள்ளது.
இந்தத் தொழிற்சங்க நடவடிக்கை நாட்டின் அனைத்து அரச பல்கலைக்கழகங்களிலும் முன்னெடுக்கப்படும் என FUTA பொதுச் செயலாளரும் சிரேஷ்ட விரிவுரையாளருமான சருதத்த இலங்கசிங்க தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழக விரிவுரையாளர்களுக்கான பற்றாக்குறை, தற்போது பணியாற்றும் விரிவுரையாளர்கள் மீது சுமத்தப்படும் அதிகப்படியான பணிச்சுமை, போதிய வளங்களின்மை மற்றும் போதுமான பௌதிக வசதிகள் இல்லாமை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வு கோரியே இந்தப் பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பணிப்புறக்கணிப்புடன் இணைந்து நாளைய தினம் எதிர்ப்பு ஊர்வலமொன்றையும் ஏற்பாடு செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.




