செய்தி

பஹ்ரைனில் அமெரிக்க இராணுவத் தளம்மீது தாக்குதல்: ஈரான் அறிவிப்பு

ஹோர்முஸ் நீரிணையில் இடம்பெறுவதாகக் கூறப்படும் வான்வழி அத்துமீறல்கள் மற்றும் எண்ணெய்க் கடத்தல் நடவடிக்கைகளுக்குப் பதிலடியாக, பஹ்ரைனில் உள்ள அமெரிக்க இராணுவத் தளத்தின் ரேடார் கட்டமைப்பைத் தாக்கி அழித்துள்ளதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை (IRGC) தெரிவித்துள்ளது.

ஹோர்முஸ் நீரிணையில் இடம்பெறுவதாகக் கூறப்படும் வான்வழி அத்துமீறல்கள் மற்றும் எண்ணெய்க் கடத்தல் நடவடிக்கைகளுக்குப் பதிலடியாக, பஹ்ரைனில் உள்ள அமெரிக்க இராணுவத் தளத்தின் ரேடார் கட்டமைப்பைத் தாக்கி அழித்துள்ளதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை (IRGC) தெரிவித்துள்ளது.

தஸ்னிம் செய்தி நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், இந்தத் தாக்குதல் “ஆக்கிரமிப்பு எதிரிக்கு விடுக்கப்பட்ட தீவிர எச்சரிக்கை” என IRGC குறிப்பிட்டுள்ளது.

மேலும், இத்தகைய அத்துமீறல்கள் மற்றும் ஆக்கிரமிப்புச் செயல்கள் மீண்டும் இடம்பெற்றால், எவ்வித வரம்புகளுமின்றி பதிலடி கொடுக்க IRGC-யின் படை முழுமையான தயார் நிலையில் இருப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

IRGC-யுடன் தொடர்புடைய பார்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்ட தகவலில், அதன் விண்வெளிப் படை குறித்த ரேடார் கட்டமைப்பை இலக்கு வைத்து தாக்கி அழித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.

எனினும், இந்தத் தாக்குதல் தொடர்பில் அமெரிக்கா அல்லது பஹ்ரைன் அரசாங்கம் உடனடியாக எந்தக் கருத்தையும் வெளியிடவில்லை.

அமெரிக்கக் கடற்படையின் ஐந்தாவது படைப்பிரிவின் தலைமையகம் பஹ்ரைனில் அமைந்துள்ளது. தலைநகர் மனாமாவில் உள்ள கடற்படை ஆதரவு நடவடிக்கைத் தளத்தில் அமைந்துள்ள இந்தத் தலைமையகம், மத்திய கிழக்கில் அமெரிக்கக் கடற்படையின் நடவடிக்கைகளுக்கான பிரதான கட்டளை மையமாகச் செயல்படுகிறது.

கடந்த பெப்ரவரி 28ஆம் திகதி போர் ஆரம்பமான முதல் சில மணிநேரங்களிலேயே இந்தத் தளம் தாக்குதலுக்கு உள்ளானது. அல் ஜசீரா ஆய்வு செய்த செயற்கைக்கோள் படங்களில், தளத்திலுள்ள பல ரேடார் குவிமாடங்கள் நேரடியாகத் தாக்கப்பட்டதுடன், கட்டடங்களுக்கும் சேதம் ஏற்பட்டிருந்தமை தெரியவந்தது.

இதற்கிடையில், ஈரான் மீது மீண்டும் தாக்குதல் நடத்துவது குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பரிசீலித்து வரும் நிலையில், பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்களில் படையினரின் எண்ணிக்கையைக் குறைக்கவும், சில இராஜதந்திரப் பணியாளர்களை வெளியேற்றவும் அமெரிக்கா உத்தரவிட்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எனினும், தமது பணிகளின் தயார் நிலையை மேம்படுத்துவதற்காகப் படையினர் மற்றும் இராணுவ வளங்களைத் தாம் வழமையாக இடமாற்றம் செய்வதாக அமெரிக்க மத்திய கட்டளைத் தலைமையகம் தெரிவித்துள்ளது.

செப்டெம்பருக்குப் பின்னர் பஹ்ரைனில் முதல் தாக்குதல்

ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் தகவலின்படி, வளைகுடா நாடொன்றில் உள்ள அமெரிக்க இராணுவ வளங்கள் மீது தாக்குதல் நடத்தியதாக ஈரான் கடந்த செப்டெம்பர் மாத ஆரம்பத்துக்குப் பின்னர் அறிவிப்பது இதுவே முதல் தடவையாகும்.

இதேவேளை, ஈரான் மீது சாத்தியமான தாக்குதலை முன்னெடுப்பதற்கான தயாரிப்புகளைத் தீவிரப்படுத்துமாறு இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை இராணுவத்துக்கு உத்தரவிட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்களும், அரச ஒலிபரப்பு நிறுவனமான KAN-உம் செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்கா மீண்டும் போரை ஆரம்பித்தால், மேற்கு ஆசியா முதல் ஐரோப்பா வரையிலான பகுதிகளில் உள்ள அந்தத் தாக்குதலுடன் தொடர்புடைய அனைத்து இராணுவத் தளங்களும் ஈரானின் தாக்குதல்களுக்கு இலக்காகும் என ஈரானின் பாதுகாப்புத் தலைவர் மொஹ்சென் ரெசாயி எச்சரித்துள்ளார்.

கடந்த செப்டெம்பர் மாதம் வெளியிடப்பட்ட அமெரிக்கப் பாதுகாப்புத் திணைக்களத்தின் ஆய்வாளர் நாயகத்தின் அறிக்கையின்படி, போரின் முதல் நான்கு மாதங்களில் பஹ்ரைன் உள்ளிட்ட எட்டு நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்க இராணுவத் தளங்களில் நூற்றுக்கணக்கான கட்டடங்கள் ஈரானின் தாக்குதல்களால் சேதமடைந்துள்ளன அல்லது அழிக்கப்பட்டுள்ளன.

பிராந்தியத்தில் உள்ள அமெரிக்காவின் பல இராணுவத் தளங்கள் ஏறத்தாழ பயன்படுத்த முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கட்டார் முன்வைத்துள்ள இராஜதந்திர முயற்சிகள் மூலம் உடன்பாடு எட்டப்படாவிட்டால், மீண்டும் போரைத் தொடங்கத் தயாராக இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி