ஈரான் அணு ஆயுதம் உருவாக்க அனுமதிக்க முடியாது – ஐரோப்பிய ஒன்றியம்
அமெரிக்கா–ஈரான் இடையிலான பேச்சுவார்த்தைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை ஐரோப்பிய ஒன்றிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் வரவேற்றுள்ளார். அதேவேளை, ஈரான் அணு ஆயுதம் உருவாக்க அனுமதிக்கப்படக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
X தளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த ஒப்பந்தம் பிராந்திய மோதல்களை உண்மையாக தணிக்க வேண்டும் என்றும், ஹோர்முஸ் நீரிணையில் தடையற்ற கப்பல் போக்குவரத்து சுதந்திரம் உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஈரான் மற்றும் அதன் ஆதரவு குழுக்கள் பிராந்தியத்தில் மேற்கொள்ளும் ஸ்திரத்தன்மையை பாதிக்கும் நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் என்றும், வளைகுடா அண்டை நாடுகள் மீதான தாக்குதல்களையும் முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நீடித்த இராஜதந்திரத் தீர்வை உருவாக்கும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள, சர்வதேச பங்காளிகளுடன் இணைந்து ஐரோப்பா தொடர்ந்து பணியாற்றும் என்றும் உர்சுலா வான் டெர் லேயன் தெரிவித்துள்ளார்.




