ஈரான் போர்நிறுத்த ஒப்பந்தமும், சில சர்ச்சைகளும்
அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான ஒப்பந்தங்கள் குறித்த சில சிக்கலான விடயங்கள் குறித்த சந்தேகங்கள் எழுந்துள்ளன.
இந்த ஒப்பந்தம் வரும் வெள்ளிக்கிழமை கையெழுத்தாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ஒப்பந்தம் குறித்த உரை விரைவில் வெளியிடப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார்.
இந்த இடைக்கால ஒப்பந்தம், ஏப்ரல் மாதம் அறிவிக்கப்பட்ட நிலையற்ற போர் நிறுத்தத்தை மேலும் 60 நாட்களுக்கு நீட்டிப்பதுடன், ஹோர்முஸ் ஜலசந்தியையும் மீண்டும் திறக்கும்.
தெஹ்ரான் அணு ஆயுதம் வைத்திருக்காது என்று ஒப்பந்தத்தின் உரை தெளிவாகக் குறிப்பிடுவதாகவும், முழுமையான ஒப்பந்தம் இன்னும் சில நாட்களில் முறைப்படி வெளியிடப்படும் என்றும் ட்ரம்ப் கூறியுள்ளார்.
ஒப்பந்தம் முறைப்படி கையெழுத்திடப்பட்ட பிறகு, வெள்ளிக்கிழமை சுவிட்சர்லாந்தில் பேச்சுவார்த்தைகள் தொடங்கும் என்று ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி கூறியுள்ள நிலையில், பேச்சுவார்த்தையின் அடுத்த கட்டத்தில் ஈரானின் அணுசக்தித் திட்டத்தின் எதிர்காலம் போன்ற கடினமான பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இருப்பினும் பிராந்திய ஆயுதமேந்திய முகவர்களுக்கான ஈரானின் ஆதரவை முடிவுக்குக் கொண்டுவருவது மற்றும் அதன் ஏவுகணைத் திட்டத்தைக் கட்டுப்படுத்துவது புதிய பேச்சுவார்த்தைகளின் நிகழ்ச்சி நிரலில் இடம்பெறாது என்று கருதப்படுகிறது.
இந்நிலையில் அடுத்தக் கட்ட ஒப்பந்தம் எட்டப்படுவது கேள்விக்குறியாகியுள்ளது.
அமெரிக்கா – ஈரானுக்கு இடையே உள்ள ஒப்பந்தத்தில் உள்ள சில சிக்கல்கள் வருமாறு,
இறுதி ஒப்பந்தம் இன்னும் வடிவம் பெறவில்லை
இந்த ஒப்பந்தம் குறித்த செய்தியைத் தொடர்ந்து எண்ணெய் விலைகள் கிட்டத்தட்ட 5 சதவீதம் சரிந்துள்ளன. செவ்வாயன்று 02 சதவீதத்திற்கும் அதிகமாக சரிந்துள்ளது.
இருப்பினும், மத்திய கிழக்கு எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி முழுமையாக மீண்டுவர பல மாதங்கள் ஆகும் என்று தொழில்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.
அதேநேரம் இந்த ஒப்பந்தம், ட்ரம்பை அவரது சொந்தக் கட்சிக்குள்ளேயே விமர்சனத்திற்கு உள்ளாக்குகிறது, அதே நேரத்தில், ஒரு அழிவுகரமான போருக்குப் பிறகு பொருளாதார அழுத்தங்களைக் குறைக்கத் தவறினால், ஈரான் தலைவர்கள் மீண்டும் போராட்டங்கள் வெடிக்கும் அபாயத்தை எதிர்கொள்ளக்கூடும் என்ற அச்சமும் எழுந்துள்ளது.
தடைகளை நீக்குவதன் மூலமும், வெளிநாட்டு சொத்துக்களை முடக்குவதிலிருந்து விடுவிப்பதன் மூலமும் இந்த ஒப்பந்தம் இறுதியில் ஈரானுக்கு கணிசமான பொருளாதார நன்மைகளை வழங்கக்கூடும் என்றாலும், போரால் ஏற்பட்ட பாதிப்புகள் அந்நாட்டின் பொருளாதாரத்தை பழைய நிலைக்கு கொண்டுவர நீண்ட காலத்தை எடுக்கும்.
இதற்கிடையே போர் ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக அமெரிக்கா ஈரானுக்கு 300 பில்லியன் டொலர் நிதியை விடுவிக்கும். இதற்கு பிரதியீடாக ஈரான் அணு ஆயுதத்தை கைவிட வேண்டும். ஆனால் போர் தொடங்கியத்தில் இருந்து ஈரான் இந்த விடயத்தில் முரண்பட்ட கருத்துக்களை கொண்டுள்ளது, .
கப்பல் போக்குவரத்து குறித்த எச்சரிக்கை
பொதுவாக உலகின் எண்ணெய் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு வர்த்தகத்தில் சுமார் ஐந்தில் ஒரு பங்கைக் கொண்டுசெல்லும் ஹோர்முஸ் ஜலசந்தி, வெள்ளிக்கிழமை முதல் திறக்கப்படும் என்று இரு தரப்பினரும் கூறுகின்றனர்.
செவ்வாயன்று, ஈரான் அரசு தொலைக்காட்சி தனது கடல்வழி முற்றுகையை நீக்கும் நடவடிக்கைகள் குறித்து செய்தி வெளியிட்டது, அதே நேரத்தில் கப்பல்கள் ஈரானின் புரட்சிகர காவலர்களுடன் தொடர்ந்து ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியது.
முன்னதாக, எண்ணெய்க் கப்பல்கள் அந்த நீர்வழியிலிருந்து வெளியேறத் தொடங்கியுள்ளதாக ட்ரம்ப் கூறியிருந்தார். மேலும், ஈரானிய துறைமுகங்கள் மீது தனது சொந்த முற்றுகையை விதித்திருந்த அமெரிக்கா, வளைகுடா எரிசக்தி ஏற்றுமதியைத் தடையின்றித் தொடர, கப்பல்களுக்கு இடையேயான பல ரகசிய எண்ணெய் பரிமாற்றங்களை மேற்பார்வையிட்டு வருவதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டது.
அந்த நீர்வழி 60 நாட்களுக்குக் கட்டணமின்றித் திறந்திருக்கும் என்றும், அந்த ஏற்பாடு இறுதி ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இருக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் அமெரிக்கா கூறியது. அந்த நீர்வழியின் மீதான கட்டுப்பாட்டை ஓமானுடன் தக்கவைத்துக் கொள்ளும் என்று ஈரான் தெரிவித்திருக்கிறது.
இந்த முரண்பட்ட கருத்துகள் ஹோர்மூஸ் ஜலசந்தி இயல்பு நிலைக்கு திரும்புவதில் பல சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.
அத்துடன் ஈரானுக்கும் ஓமானுக்கும் இடையேயான குறுகிய நீர்வழியில் கண்ணிவெடிகள் இருப்பதற்கான சாத்தியக்கூறு ஒரு கவலையாக உள்ளது. ஒரு முழுமையான கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைக்கு “வாரங்கள் முதல் மாதங்கள் வரை ஆகும்” என்று கிரேக்க கடல்சார் பாதுகாப்பு நிறுவனமான டயாப்லஸின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
லெபனான் குறித்த நிச்சயமற்ற நிலை
லெபனானில், அமெரிக்காவின் நட்பு நாடான இஸ்ரேலுக்கும், ஈரானுடன் கூட்டணி வைத்துள்ள ஹிஸ்புல்லா போராளிக் குழுவிற்கும் இடையே 12 லட்சம் மக்களை இடம்பெயரச் செய்துள்ள மோதல், மற்றொரு சிக்கலாக நீடிக்கிறது.
அங்கு முழுமையான போர் நிறுத்தம் தேவை என்று இந்த ஒப்பந்தம் கூறுவதாக ஈரான் தெரிவித்துள்ள நிலையில், தெற்கு லெபனானில் இஸ்ரேல் தனது படைகளைத் தக்கவைத்துக் கொள்ளும் என்றும், ஹிஸ்புல்லாவிற்கு பதிலடி கொடுக்கும் உரிமையைத் தக்க வைத்துக் கொள்ளும் என்றும் நெதன்யாகு கூறியுள்ளார்.





