ராணுவத் தளவாட உற்பத்தியில் புதிய உச்சத்தை நோக்கி இந்தியா
இந்தியா, 2029ஆம் ஆண்டுக்குள் ரூ.3 லட்சம் கோடி மதிப்பிலான ராணுவத் தளவாடங்களை உற்பத்தி செய்யவும், ரூ.50 ஆயிரம் கோடி மதிப்பிலான ராணுவத் தளவாடங்களை ஏற்றுமதி செய்யவும் இலக்கு நிர்ணயித்துள்ளதாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
இந்திய ராணுவப் படைகளின் நவீனமயமாக்கல் தொடர்பான பாதுகாப்புத் துறை ஆலோசனைக் குழுக் கூட்டம், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் நேற்று நடைபெற்றது. மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் அவர் மேலும் தெரிவித்ததாவது:
தற்போதைய மற்றும் எதிர்கால பாதுகாப்புச் சவால்களை எதிர்கொள்ளும் வகையில், நவீன தொழில்நுட்ப வசதிகளைக் கொண்ட வலிமையான ராணுவத்தை உருவாக்குவதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது.
2026–27ஆம் நிதியாண்டுக்கான பாதுகாப்புத் துறை வரவு செலவுத் திட்டம் இதுவரை இல்லாத அளவுக்கு ரூ.7.85 லட்சம் கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
2029ஆம் ஆண்டுக்குள் ரூ.3 லட்சம் கோடி மதிப்பிலான ராணுவத் தளவாடங்களை உள்நாட்டில் உற்பத்தி செய்வதுடன், ரூ.50 ஆயிரம் கோடி மதிப்பிலான தளவாடங்களை ஏற்றுமதி செய்வதற்கும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நவீன போர் முறைகளில் தொழில்நுட்பத்தின் முக்கியத்துவம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேம்பட்ட ஆயுதங்கள், ஏவுகணைகள் மற்றும் ராணுவத் தொழில்நுட்பக் கட்டமைப்புகளை உருவாக்குவதில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பான (DRDO) மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் பாராட்டுக்குரியவை.
இந்திய ராணுவத்தில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள அசானி (Asani), பைரவ் (Bhairav), சக்திபன் (Shaktiban) உள்ளிட்ட படைப் பிரிவுகள், தற்போதைய ராணுவ நடவடிக்கைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன.
இவ்வாறு ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.




