இந்தியா ஐரோப்பா செய்தி

அமெரிக்காவுக்கு அதிர்ச்சி; ஐரோப்பாவை நோக்கி நகரும் இந்திய ஆடை நிறுவனங்கள்

அமெரிக்கா விதித்த இறக்குமதி வரி அதிகரிப்பால் ஏற்பட்ட பாதிப்புகளைத் தொடர்ந்து, இந்திய ஆடை உற்பத்தியாளர்கள் அமெரிக்கச் சந்தையைச் சார்ந்திருப்பதைக் குறைத்து, மாற்றுச் சந்தைகளை நோக்கித் தமது வர்த்தக நடவடிக்கைகளை மாற்றி வருகின்றனர்.

அமெரிக்கா விதித்த இறக்குமதி வரி அதிகரிப்பால் ஏற்பட்ட பாதிப்புகளைத் தொடர்ந்து, இந்திய ஆடை உற்பத்தியாளர்கள் அமெரிக்கச் சந்தையைச் சார்ந்திருப்பதைக் குறைத்து, மாற்றுச் சந்தைகளை நோக்கித் தமது வர்த்தக நடவடிக்கைகளை மாற்றி வருகின்றனர்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் கடந்த 2025ஆம் ஆண்டு இந்தியப் பொருட்களுக்கு 50 சதவீதம் வரை இறக்குமதி வரியை அதிகரித்ததைத் தொடர்ந்து, இந்திய ஆடை ஏற்றுமதியாளர்கள் கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்டனர்.

இதனால் அமெரிக்காவிலுள்ள பல கொள்வனவாளர்கள் தமது ஆடை ஆர்டர்களை இரத்துச் செய்ததுடன், விலைக் கழிவுகளையும் கோரியுள்ளனர். இதன் காரணமாக உற்பத்தியாளர்களின் இலாப விகிதம் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் முன்னணி ஆடை உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான ஓரியண்ட் கிராஃப்ட் (Orient Craft), அமெரிக்காவுக்கான ஏற்றுமதியைக் கணிசமாகக் குறைத்துள்ளது.

இந்நிறுவனத்தின் நிறுவுநர் சுதிர் தின்க்ரா தெரிவிக்கையில், அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தம் எட்டப்பட்டாலும் அது நீண்டகாலத்துக்கு நிலைத்திருக்கும் என்பதற்கு என்ன உத்தரவாதம் உள்ளது எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

அமெரிக்காவை அதிகளவில் சார்ந்திருப்பது எதிர்காலத்தில் ஆபத்தானதாக அமையலாம் என்பதால், பிரித்தானியா, ஐரோப்பா மற்றும் இந்திய உள்நாட்டுச் சந்தைகளில் வர்த்தகத்தை விரிவுபடுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, ஓரியண்ட் கிராஃப்ட் நிறுவனத்தின் மொத்த விற்பனையில் அமெரிக்கச் சந்தையின் பங்களிப்பு 84 சதவீதமாக இருந்தது. தற்போது அது 10 சதவீதத்துக்கும் குறைவாக வீழ்ச்சியடைந்துள்ளது.

இந்தியாவின் மற்றொரு முன்னணி ஆடை ஏற்றுமதி நிறுவனமான கோகல்தாஸ் எக்ஸ்போர்ட்ஸ் (Gokaldas Exports) நிறுவனமும் ஐரோப்பியச் சந்தையில் தனது வர்த்தகத்தை விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளது.

தற்போது அந்நிறுவனத்தின் வருவாயில் 15 முதல் 16 சதவீதம் வரை ஐரோப்பியச் சந்தையிலிருந்து கிடைக்கிறது. இதனை அடுத்த மூன்று முதல் ஐந்து ஆண்டுகளில் 25 முதல் 30 சதவீதமாக அதிகரிக்கவும், அமெரிக்கச் சந்தையின் பங்களிப்பை 50–55 சதவீதத்திலிருந்து 35–40 சதவீதமாகக் குறைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

ஏற்றுமதியில் ஏற்பட்ட மாற்றம்

இந்தியாவின் ஜவுளி, ஆடை மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களுக்கான ஏற்றுமதி விபரங்களிலும் இந்த மாற்றம் தென்படுகிறது.

கடந்த ஏப்ரல் முதல் ஓகஸ்ட் வரையான காலப்பகுதியில் அமெரிக்காவுக்கான இந்திய ஏற்றுமதி 9.8 சதவீதத்தால் குறைந்து 4 பில்லியன் டொலராகப் பதிவாகியுள்ளது.

அதேவேளை, ஏனைய நாடுகளுக்கான ஏற்றுமதி 3.7 சதவீதத்தால் அதிகரித்து 15.2 பில்லியன் டொலராக உயர்ந்துள்ளது.

இந்திய ஏற்றுமதியாளர்கள் தற்போது பிரித்தானியா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் உள்ளிட்ட சந்தைகளில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர்.

இந்தியாவுக்கும் பிரித்தானியாவுக்கும் இடையிலான வர்த்தக ஒப்பந்தம் கடந்த ஜூலை மாதம் நடைமுறைக்கு வந்ததைத் தொடர்ந்து, இந்திய ஆடைகளுக்கு பிரித்தானியாவில் வரியில்லா சந்தை வாய்ப்பு கிடைத்துள்ளது.

இதேபோன்ற வர்த்தக ஒப்பந்தம் ஐரோப்பிய ஒன்றியத்துடனும் எட்டப்பட்டால், இந்திய ஆடைகளுக்கு தற்போது விதிக்கப்படும் 12 முதல் 17 சதவீத வரியை நீக்குவதற்கான வாய்ப்பு ஏற்படும் என ஏற்றுமதியாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

உற்பத்திச் செலவுகளைக் குறைக்கவும் முயற்சி

மாற்றுச் சந்தைகளைத் தேடுவதுடன், உற்பத்திச் செலவுகளைக் குறைப்பதற்கும் இந்திய ஆடை நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக, ஜார்க்கண்ட் மாநிலத்தின் ராஞ்சி பகுதியில் ஆடைத் தொழிற்சாலைகளை நிறுவுவதில் நிறுவனங்கள் ஆர்வம் காட்டுகின்றன.

அரசாங்க மானியங்கள், குறைந்த செலவில் காணிகளைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு மற்றும் பயிற்சிபெற்ற தொழிலாளர்கள் கிடைப்பது ஆகியவை இந்தப் பகுதிக்கு நிறுவனங்களை ஈர்க்கும் முக்கிய காரணிகளாக உள்ளன.

இந்தியாவின் உள்நாட்டு ஆடைச் சந்தையும் சுமார் 150 பில்லியன் டொலர் பெறுமதியைக் கொண்டுள்ளதுடன், ஆண்டுதோறும் 7 முதல் 8 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்து வருகின்றது.

அமெரிக்கச் சந்தையை முற்றாகக் கைவிடும் நோக்கம் இல்லை எனத் தெரிவிக்கும் இந்திய ஏற்றுமதியாளர்கள், ஒரே சந்தையை மட்டும் நம்பியிருக்கும் நிலையை மாற்றுவது நீண்டகால வர்த்தக உத்தியாக மாறியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த மாற்றம் அமெரிக்காவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தைகளில் இந்தியாவுக்குச் சாதகமான நிலையை உருவாக்குவதுடன், அமெரிக்காவின் வர்த்தக அழுத்தங்களுக்கு இந்தியா முகங்கொடுக்கும் பாதிப்பையும் எதிர்காலத்தில் குறைக்கக்கூடும் என ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி