சவூதியின் முக்கிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது ஹூதிகள் தாக்குதல்
அமெரிக்கா – ஈரான் இடையிலான போர் காரணமாக மத்திய கிழக்கில் இராணுவ பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், சவூதி அரேபியாவின் செங்கடல் கரையோரத்தில் அமைந்துள்ள முக்கிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது தாக்குதல் நடத்தியதாக ஈரான் ஆதரவு ஹூதி கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின்படி, சவூதி அரேபியாவின் மேற்கு செங்கடல் கரையோரத்தில் அமைந்துள்ள ராபிக் (Rabigh) எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை இலக்காகக் கொண்டு இராணுவ நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாகவும், அந்த நிலையம் நேரடியாகத் தாக்கப்பட்டதாகவும் ஹூதிகள் கடந்த நவம்பர் 22ஆம் திகதி தெரிவித்துள்ளனர்.
எனினும், தாக்குதலால் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் எண்ணெய் சுத்திகரிப்பு நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளனவா என்பது தொடர்பான தகவல்கள் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. சசவூதி அரேபிய அதிகாரிகளும் இந்தத் தாக்குதல் குறித்து உத்தியோகபூர்வமாக கருத்து தெரிவிக்கவில்லை.
ராபிக் பகுதியில், சவூதி அரேபியாவின் அரச எண்ணெய் நிறுவனமான அராம்கோ (Aramco) மற்றும் ஜப்பானின் சுமிடோமோ கெமிக்கல் (Sumitomo Chemical) ஆகிய நிறுவனங்களால் உருவாக்கப்பட்ட பெட்ரோ ராபிக் (Petro Rabigh) எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோ இரசாயன உற்பத்தி வளாகம் அமைந்துள்ளது.
இந்த வளாகத்தில் எண்ணெய் சுத்திகரிப்பு, பெட்ரோ இரசாயன உற்பத்தி மற்றும் ஆழ்கடல் துறைமுகம் ஊடாக எரிபொருள் ஏற்றுமதி செய்வதற்கான வசதிகளும் உள்ளன. ஜெட்டாவுக்கு வடக்கே சுமார் 165 கிலோமீற்றர் தொலைவில் செங்கடல் கரையோரத்தில் அமைந்துள்ள இந்தப் பகுதி, சவூதி அரேபியாவின் முக்கிய தொழில்துறை மையங்களில் ஒன்றாக விளங்குகிறது.
இந்தத் தாக்குதல் உறுதிப்படுத்தப்பட்டால்,சவூதி அரேபியாவின் எரிசக்தித் துறைக்கு குறிப்பிடத்தக்க பாதிப்பு ஏற்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சவூதி அரேபியாவின் எரிசக்தி கட்டமைப்புகளை இலக்காகக் கொண்டு கடந்த சில மாதங்களாக ஹூதிகள் தொடர்ச்சியான தாக்குதல்களை நடத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது. நாட்டின் கிழக்கு – மேற்கு எண்ணெய் குழாய், தெற்கில் உள்ள ஜசான் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் கிழக்கில் உள்ள ராஸ் தனுரா உள்ளிட்ட பகுதிகள் தாக்குதலுக்கான இலக்குகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. எனினும், இத்தாக்குதல்கள் தொடர்பில்சவூதி அதிகாரிகள் இதுவரை உத்தியோகபூர்வ உறுதிப்படுத்தல்களை வெளியிடவில்லை.
அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போர் தீவிரமடைந்துள்ள நிலையில், கடந்த ஜூலை மாதம் முதல் ஹூதிகளுக்கும் சவூதி அரேபியாவுக்கும் இடையிலான மோதல்கள் மீண்டும் அதிகரித்துள்ளதாக ரொய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.




