இலங்கையை உலுக்கிய கோர விபத்து: சாரதி போதையில் இருந்தமை அம்பலம்
இலங்கையில் அநுராதபுரம்மாவட்டம் ரம்பேவ பகுதியில் இடம்பெற்ற மூன்று பஸ்கள் மோதிய கோர விபத்து தொடர்பில் பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணைகள் மற்றும் மருத்துவப் பரிசோதனைகளில் பல முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறித்த விபத்தில் உயிரிழந்த இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ்ஸின் சாரதி, விபத்து இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் கஞ்சா மற்றும் மதுபானம் அருந்தியிருந்தமை சிறுநீர் மாதிரிப் பரிசோதனையின் மூலம் தெரியவந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 10ஆம் திகதி காலை, அநுராதபுரம் – மிஹிந்தலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்டி – யாழ்ப்பாணம் (A9) வீதியில் ரம்பேவ, வெலிஓயா சந்திக்கு அருகில் மூன்று பஸ்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் இலங்கை போக்குவரத்துச் சபை பஸ் சாரதி ஒருவர் மற்றும் இரண்டு பெண்கள் உள்ளிட்ட நால்வர் உயிரிழந்ததுடன், மேலும் 76 பயணிகள் காயமடைந்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.




