இலங்கையின் தெற்கு கடற்பரப்பில் 110 கிலோ போதைப் பொருள் மீட்பு:பின்னணி என்ன?
இலங்கையின் தெற்கு கடற்பரப்பில் பல நாள் மீன்பிடிப் படகொன்றிலிருந்து சுமார் 52 முதல் 60 கிலோ வரையான ஹெரோயின் மற்றும் 50 கிலோவுக்கும் அதிகமான ஐஸ் போதைப்பொருள் ஆகியவற்றை இலங்கை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் மொத்த நிறை 110 கிலோவைத் தாண்டுவதாகவும், அவற்றின் பெறுமதி 150 கோடி ரூபாவிற்கும் அதிகமாக இருக்குமென மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.
குறித்த படகு காலி மீன்பிடித் துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டதைத் தொடர்ந்து, இன்று (13) அதனைப் பார்வையிட்ட பின்னர் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் மொத்த நிறை 110 கிலோகிராமைத் தாண்டுவதாகவும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்துத் தெரிவித்த பாதுகாப்பு பிரதி அமைச்சர்,
மிரிஸ்ஸ மீன்பிடித் துறைமுகத்தைத் தளமாகக் கொண்டு செயற்பட்ட மீனவர்கள் குழுவொன்றை கடற்படையினர் கைது செய்துள்ளனர். படகுடன் ஐந்து சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தற்போது கிடைத்துள்ள தகவல்களின்படி, பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் மேற்கொண்ட பரிசோதனைகளில், குறித்த பொதியில் சுமார் 60 கிலோகிராம் ஹெரோயினும் 50 கிலோகிராமிற்கும் அதிகமான ஐஸ் போதைப்பொருளும் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த நவம்பர் 11ஆம் திகதி அதிகாலை இலங்கை கடற்படையினரும் புலனாய்வுப் பிரிவினரும் இணைந்து முன்னெடுத்த விசேட நடவடிக்கையின்போது குறித்த மீன்பிடிப் படகு இடைமறிக்கப்பட்டுள்ளது.
இதன்போது படகிலிருந்த ஐந்து பணியாளர்களும் கைது செய்யப்பட்டதுடன், படகும் கடற்படையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
பின்னர் படகில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது ஆறு சாக்குகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 102 பொதிகள் போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
அவற்றில் 52 பொதிகள் ஹெரோயினும் 50 பொதிகள் ஐஸ் போதைப்பொருளும் உள்ளடங்கியிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.




