கரூர் நெரிசலில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு அரசுப் பணி: அரசாணையை ரத்து செய்தது உயர் நீதிமன்றம்
கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக (தவெக) கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குக் கருணை அடிப்படையில் அரசுப் பணி வழங்கித் தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த 31 பேருக்கு அரசு வேலை வழங்கப்பட்டது.
இதையெடுத்து, “உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்களைப் பின்பற்றாமல் அரசு வேலை வழங்கப்பட்டிருப்பது தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தும்; மேலும் இது தொடர்பான சிபிஐ விசாரணையைப் பாதிக்கும்” எனக் கூறி நாம் தமிழர் கட்சியின் தீரன் திருமுருகன் மற்றும் வழக்கறிஞர் சீனி அகமது உள்ளிட்டோர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல மனுத் தாக்கல் செய்தனர்.
பொதுமக்களின் தவறால் இந்தச் சம்பவம் நடக்கவில்லை என்றும், அரசியலமைப்புச் சட்டத்திற்குட்பட்டே கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்கப்பட்டதாகவும், அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும் அரசுத் தரப்பில் வாதிடப்பட்டது.
“கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்குவது தொடர்பாக உச்ச நீதிமன்றம் பல்வேறு வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது.
கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு வேலை வழங்கியதில் அந்த வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படவில்லை. பாதிக்கப்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த அரசு திறன் பயிற்சி உள்ளிட்ட மாற்று வழிகளை யோசிக்கலாம்.”
எனக் குறிப்பிட்டு, உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு அரசுப் பணி வழங்கிப் பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்து அதிரடி உத்தரவிட்டனர்.





