17 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தார் மெக்ஸ்வெல்
சர்வதேச கிரிக்கெட்டுக்கு விடைகொடுத்தார் அதிரடி நாயகன் மெக்ஸ்வெல்
ஆஸ்திரேலிய அணியின் அதிரடி சகலதுறை வீரர் கிளென் மெக்ஸ்வெல் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார்.
38 வயதான மெக்ஸ்வெல், கடந்த 2025ஆம் ஆண்டு ஒருநாள் சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்றிருந்த நிலையில், தற்போது ஆஸ்திரேலிய அணியின் T20 போட்டிகள் மற்றும் விக்டோரியா மாநில அணிக்கான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார்.
விக்டோரியா அணிக்காகத் தனது இறுதி ஒருநாள் போட்டியில் விளையாடிய பின்னர், சக வீரர்களிடம் விடைபெற்று உரையாற்றிய தருணம் எதிர்பார்த்ததைவிட மிகவும் உணர்ச்சிகரமாக அமைந்ததாக மெக்ஸ்வெல் தெரிவித்துள்ளார்.
‘தி பைனல் வேர்ட்’ (The Final Word) நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர், தனது ஓய்வு குறித்து சக வீரர்களிடம் தெரிவித்தபோது உணர்ச்சிவசப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்ற T20 உலகக் கிண்ணத் தொடரில் ஆஸ்திரேலிய அணிக்காக மெக்ஸ்வெல் விளையாடியிருந்தார்.
தனது சர்வதேச T20 கிரிக்கெட் வாழ்க்கையில் 130 போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 28.97 என்ற சராசரியில் 2,897 ஓட்டங்களைக் குவித்துள்ளார். அவரது துடுப்பாட்ட வேகம் 154.42 ஆகும்.
மேலும், 51 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளதுடன், 62 பிடியெடுப்புகளையும் மேற்கொண்டுள்ளார். 2016ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிராக ஆட்டமிழக்காமல் 145 ஓட்டங்களைக் குவித்ததே அவரது அதிகூடிய தனிநபர் ஓட்ட எண்ணிக்கையாகும்.
‘எனது நாட்டுக்காக விளையாடக் கிடைத்த வாய்ப்புகளுக்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். 2009ஆம் ஆண்டு விக்டோரியா அணியின் உடைமாற்றும் அறைக்குள் முதன்முதலில் நுழைந்தபோது, இத்தகைய கிரிக்கெட் வாழ்க்கை எனக்குக் கிடைக்கும் எனக் கூறியிருந்தால், அதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டிருப்பேன்’ என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், கிரிக்கெட்டை வித்தியாசமான முறையில் விளையாட விரும்பும் இளம் வீரர்களுக்கு முன்மாதிரியாக இருக்க முடிந்தமை மகிழ்ச்சியளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவுஸ்திரேலிய அணிக்காக ஏழு டெஸ்ட் போட்டிகள் மற்றும் 149 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளிலும் மெக்ஸ்வெல் விளையாடியுள்ளார். அத்துடன், விக்டோரியா அணிக்காக முதற்தர மற்றும் லிஸ்ட் ஏ போட்டிகளிலும் சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளார்.
எனினும், சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்றாலும், T20 லீக் போட்டிகளில் தொடர்ந்து விளையாடவுள்ளார். எதிர்வரும் பிக் பாஷ் லீக் தொடரில் மெல்பேர்ன் ஸ்டார்ஸ் அணிக்காகவும் அவர் களமிறங்கவுள்ளார்.




