“one in, one out” ஒப்பந்தத்தை முடிவுக்கு கொண்டுவர பிரான்ஸ் முயற்சி
பிரித்தானியா மற்றும் பிரான்ஸுக்கு இடையில் கையெழுத்தான வன்இன் – வன்அவுட் “one in, one out” என்ற குடியேற்ற ஒப்பந்தத்தை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக, பிரெஞ்சு உள்துறை அமைச்சக வட்டாரம் தகவல் வெளியிட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தை ஏன் முடிவுக்குக் கொண்டுவர பிரான்ஸ் முயற்சிக்கிறது என்பது குறித்து பிரான்ஸ் உள்துறை அமைச்சகம் உடனடியாக எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.
அதேநேரம் பிரித்தானியாவின் உள்துறை அமைச்சகமும் எவ்வித பதிலும் அளிக்கவில்லை.
ஆங்கிலக் கால்வாயைக் கடந்து சிறிய படகுகளில் வருவோரின் எண்ணிக்கையைக் குறைக்கும் நோக்கில் கடந்த ஆண்டு (2025) இந்த ஒப்பந்தம் கொண்டுவரப்பட்டது.
ஒப்பந்தத்தின்படி, சிறிய படகுகளில் வரும் ஆவணமற்ற நபர்களை பிரித்தானியா பிரான்சுக்குத் திருப்பி அனுப்பியது. அதற்குப் பதிலாக, பிரித்தானியாவில் குடும்பத் தொடர்புகளைக் கொண்ட அதே எண்ணிக்கையிலான தகுதியுள்ள புகலிடக் கோரிக்கையாளர்களைப் பிரித்தானியா ஏற்றுக்கொண்டது.
எவ்வாறாயினும் இந்த ஒப்பந்தம் தோல்வியுற்ற ஒப்பந்தம் என பல்வேறு தரப்பினரும் விமர்சித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.





