இந்தியா, சுவிட்சர்லாந்துக் கிடையில் 5 ஒப்பந்தங்கள் கைச்சாத்து
இந்தியாவிற்கும் சுவிட்சர்லாந்திற்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில், வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு, அணுசக்தி மற்றும் உள்கட்டமைப்பு வசதி ஆகிய 5 முக்கிய துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
சுவிட்சர்லாந்து ஜனாதிபதி கய் பார்மெலின் (Guy Parmelin) 3 நாள் அரசுமுறைப் பயணமாக நேற்று இந்தியா வந்தடைந்தார்.
முன்னதாக, கடந்த பெப்ரவரி மாதம் டெல்லியில் நடைபெற்ற செயற்கை நுண்ணறிவு தொடர்பான உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக அவர் இந்தியா வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்று புதுடெல்லி வந்தடைந்த சுவிட்சர்லாந்து ஜனாதிபதிக்கு விமான நிலையத்தில் அரசு முறைப்படி சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
தொடர்ந்து, டெல்லியில் அமைந்துள்ள மகாத்மா காந்தி நினைவிடமான ராஜ்காட்டுக்குச் சென்ற ஜனாதிபதி பார்மெலின், காந்தியடிகளின் நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்தினார்.
இதற்கிடையே, இந்திய மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், சுவிட்சர்லாந்து ஜனாதிபதியைச் சந்தித்துப் இருதரப்பு உறவுகளின் பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து உயர்மட்டக் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
இதனைத் தொடர்ந்து, டெல்லி ஹைதராபாத் இல்லத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை, சுவிட்சர்லாந்து யைச் கய் பார்மெலின் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தப் பேச்சுவார்த்தையின் நிறைவில், வர்த்தகம் மற்றும் முதலீடு உள்ளிட்ட துறைகளில் இருதரப்பு கூட்டுறவை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் செல்ல இரு தலைவர்களும் உறுதியேற்றனர்.
சந்திப்பிற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜனாதிபதி கய் பார்மெலின், “இரு நாடுகளும் தங்களது இருதரப்பு உறவுகளுக்கு அளிக்கும் முக்கியத்துவத்தை வெளிப்படுத்த இந்தப் பயணம் ஒரு சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ளது.
இந்தியா – சுவிட்சர்லாந்து இடையிலான உறவுகள், ‘பகிர்ந்துகொள்ளப்பட்ட ஜனநாயக விழுமியங்கள், பரஸ்பர நம்பிக்கை மற்றும் மரியாதை’ ஆகியவற்றின் அடிப்படையில் வலுவாக அமைந்துள்ளன” என்று தெரிவித்தார்.
இறுதியில், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜனாதிபதி கய் பார்மெலின் ஆகியோர் முன்னிலையில், வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு, அணுசக்தி மற்றும் உள்கட்டமைப்பு வளர்ச்சி ஆகிய 5 முக்கிய துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
இளம் தொழில் வல்லுநர்களுக்கான பரிமாற்றத் திட்டம், போக்குவரத்துத் தொழில்நுட்பங்கள், போக்குவரத்து அமைப்புகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடு ஆகியவற்றில் இரு நாடுகளும் தங்களது ஒத்துழைப்பை ஊக்குவிப்பதற்காக இந்த ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.




