திருப்பரங்குன்றம் மலையில் மத்திய பாதுகாப்பு படை குவிப்பு
தமிழகத்தின் மதுரை திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கான ஏற்பாடுகளை முன்னிட்டு, மத்திய ரிசர்வ் பொலிஸ் படையினர் (CRPF) பாதுகாப்புப் பணிகளுக்காக அங்கு சென்றடைந்துள்ளனர்.
திருப்பரங்குன்றம் மலையிலுள்ள தீபத்தூண் பகுதியில் கார்த்திகை தீபத்தை ஏற்றுவதற்கு இன்று (28) ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு இந்திய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, மலையின் பாதுகாப்புப் பொறுப்பை ஏற்கும் வகையில் CRPF படையினரின் ஒரு பிரிவினர் அங்கு நிலைநிறுத்தப்பட்டுள்ளனர்.
மலையிலும் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் பகுதியிலும் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணிகளை முன்னெடுக்கவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த நவம்பர் 24ஆம் திகதி கார்த்திகை தீபத் திருநாளன்று, தீபத்தூண் பகுதியில் தீபம் ஏற்றப்படாமல் வழக்கமான தீப மண்டபத்தில் மாத்திரம் தீபம் ஏற்றப்பட்டமை தொடர்பில் சர்ச்சை ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மீறியதாகத் தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரித்த நீதிமன்றம், தீபத்தூண் பகுதியில் நவம்பர் 28ஆம் திகதி தீபம் ஏற்றப்பட வேண்டும் என மீண்டும் உத்தரவிட்டது.
மேலும், கோயில் அறங்காவலர் குழுவின் செயற்பாடுகளை இடைநிறுத்திய நீதிமன்றம், கோயில் நிர்வாகத்தை முன்னெடுப்பதற்காக ஓய்வுபெற்ற இரு உயர் நீதிமன்ற நீதிபதிகளை நியமித்துள்ளது.
அத்துடன், மலையின் பாதுகாப்புப் பொறுப்பையும் CRPF படையினரிடம் ஒப்படைத்துள்ளது.
இந்தப் பின்னணியில், திருப்பரங்குன்றம் மலையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன




