ஓமான்மீது தாக்குதல் நடத்தப்படும்: ட்ரம்ப் எச்சரிக்கை
ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேல் போரை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சிகளுக்கு ஓமான் இடையூறாக இருந்தால், அந்நாட்டின் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.
பொக்ஸ் நியூஸ் (Fox News) அலைவரிசைக்குத் திங்கள்கிழமை அளித்த நேர்காணலின்போதே அவர் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
“ஓமான் குறுக்கே நின்றால், அவர்கள் மீது மிகக் கடுமையான குண்டுவீச்சு நடத்துவோம்” என்று ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
வாஷிங்டனுக்கும் தெஹ்ரானுக்கும் இடையே நீண்டகாலமாக ராஜதந்திர தூதராகவும் உத்திபூர்வ பங்காளியாகவும் செயற்பட்டு வரும் ஓமான் மீது, ட்ரம்ப் இத்தகைய நேரடி அச்சுறுத்தலை விடுப்பது இது இரண்டாவது முறையாகும்.
அமெரிக்க-இஸ்ரேல் கூட்டணி ஈரான் மீது தாக்குதலைத் தொடங்கி கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் நிறைவடையும் நிலையிலும், போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்கா தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
ஈரானுடன் எட்டப்பட்ட 60 நாள் தற்காலிக ஒப்பந்தக் கெடு திங்கள்கிழமையுடன் முடிவடைந்த நிலையில், எவ்வித இறுதி உடன்பாடும் எட்டப்படவில்லை. இருப்பினும், ஒப்பந்தம் காண்பதில் தாம் அவசரப்படவில்லை என்றும், ஈரான் உடனடியாக வெள்ளைக் கொடியை ஏந்திச் சரணடைய வேண்டும் என்றும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.




