அமெரிக்காமீது சைபர் போர் தொடுப்பா? தொழில்நுட்ப முடக்கத்தின் பின்னணி என்ன?
அமெரிக்காவில் கடந்த ஒரு வாரமாக அடுத்தடுத்து ஏற்பட்ட தொழில்நுட்பச் சேவைத் தடைகளுக்கும், சைபர் தாக்குதலுக்கும் இடையில் எந்தவொரு தொடர்பும் இல்லை என அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவங்கள் அனைத்தும் ஒரே திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்ட சதிச்செயலாக இருக்கலாம் என இணையத்தில் பரவலாக எழுந்துவரும் சந்தேகங்களை அவர் நிராகரித்துள்ளார்.
இந்தத் தொழில்நுட்பக் கோளாறுகளுக்கும் இடையில் தொடர்பு இருப்பதற்கான எந்தவொரு ஆதாரமும் இல்லை என ஊடகவியலாளர்களிடம் அவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் அனைத்து விமானப் பயணங்களும் தற்காலிகமாகத் தடைப்பட்டமை, வங்கிச் சேவைகளில் ஏற்பட்ட பாதிப்புகள், ஆப்பிள் மற்றும் மைக்ரோசொப்ட் நிறுவனங்களின் சேவைகளில் ஏற்பட்ட தடைகள் உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்பில் மக்கள் அச்சமடைந்துள்ளதை அவர் ஏற்றுக்கொண்டுள்ளார்.
எனினும், அமெரிக்கா எந்தவொரு பாரிய அளவிலான ஒருங்கிணைந்த தாக்குதலுக்கும் உள்ளாகவில்லை எனத் தெரிவித்த ரூபியோ, இந்தச் சம்பவங்கள் ஒவ்வொன்றும் தனித்தனியானவை என்றும், ஒன்றுக்கொன்று தொடர்பற்றவை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இணையப் பாதுகாப்பு நிபுணர்களும் இந்தத் தொழில்நுட்பக் கோளாறுகளுக்கு இடையில் தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை எனத் தெரிவித்துள்ளனர்.
பழைய தொழில்நுட்பக் கட்டமைப்புகளை மேம்படுத்தும் நடவடிக்கைகளின்போது ஏற்பட்ட கோளாறுகளே பல பாதிப்புகளுக்குக் காரணமாக இருக்கலாம் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
கடந்த ஒரு வாரத்தில் மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் பல சேவைகள் பாரிய அளவில் முடங்கின. இதனைத் தொடர்ந்து, அமெரிக்காவில் பல மணி நேரம் அனைத்து விமானங்களும் தரையிறக்கப்பட்டதுடன், தேசிய பாதுகாப்பு முகவரகம், பல அமெரிக்க வங்கிகள் மற்றும் ஆப்பிள் நிறுவனத்தின் சேவைகளிலும் பாதிப்புகள் ஏற்பட்டன.
எனினும், பாதிக்கப்பட்ட ஒவ்வொரு நிறுவனமும் இந்தச் சம்பவங்கள் இணையவழித் தாக்குதல்களால் ஏற்பட்டவை அல்ல எனத் தெரிவித்துள்ளன.
அமெரிக்க தேசியப் புலனாய்வுப் பணிப்பாளர் ஜே கிளேட்டனும், இந்தச் சம்பவங்கள் இணையவழித் தாக்குதலின் விளைவுகள் அல்ல என பொக்ஸ் நியூஸ் ஊடகத்திடம் தெரிவித்துள்ளார்.
பல நிறுவனங்கள் தமது கணினிக் கட்டமைப்புகளில் மென்பொருள் திருத்தங்கள் மற்றும் மேம்படுத்தல் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும், இதனால் சில சேவைகளில் இடையூறுகள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார்.
இந்தச் சம்பவங்கள் தொடர்பான பொதுமக்களின் அச்சம் காரணமாக அத்தியாவசியப் பொருட்களைப் பெருமளவில் சேமித்து வைப்பது அல்லது வங்கிகளில் இருந்து ஒரே நேரத்தில் பணத்தை மீளப்பெறும் நிலை உருவாகுமா என ரூபியோவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்குப் பதிலளித்த அவர், அரசாங்கத்திற்குத் தெரிந்துள்ள உண்மையான தகவல்களை அமெரிக்க மக்களுடன் வெளிப்படையாகப் பகிர்ந்துகொள்வதே இத்தகைய அச்சங்களைத் தணிப்பதற்கான சிறந்த வழி எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்தச் சம்பவங்கள் ஒவ்வொன்றுக்கும் தனித்தனியான காரணங்கள் அல்லது விளக்கங்கள் இருப்பதாகவும், அவை இணையக் குற்றவாளிகள், விரோத சக்திகள் அல்லது வேறு நாடுகளின் தலையீடுகளுடன் தொடர்புடையவை என்பதற்கான எந்தவொரு அறிகுறியும் இல்லை என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.




