மேற்காசிய போரால் இலங்கையின் அதிவேக நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு பாதிப்பு
மேற்காசியாவில் நிலவும் நெருக்கடி காரணமாக, நெடுஞ்சாலை நிர்மாணப் பணிகளுக்குத் தேவையான தார் (Bitumen) இறக்குமதியில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள், இலங்கையில் முன்மொழியப்பட்டுள்ள அதிவேக நெடுஞ்சாலைத் திட்டங்கள் உள்ளிட்ட வீதி அபிவிருத்திப் பணிகளைப் பாதித்துள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் புதிய வீதிகள், அதிவேக நெடுஞ்சாலைகள் நிர்மாணிப்பதற்கும், ஏற்கனவே உள்ள வீதிகளைப் புனரமைப்பதற்கும் ஆண்டுதோறும் சுமார் 15,000 முதல் 25,000 மெட்ரிக் தொன் தார் தேவைப்படுவதாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் அனுராத ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு தார் விநியோகிக்கும் முக்கிய நாடுகளில் ஈரானும் ஒன்றாக இருந்ததுடன், ஈரானில் உற்பத்தி செய்யப்பட்ட தார் துபாய் ஊடாக வழக்கமான சந்தை வழிகளில் இறக்குமதி செய்யப்பட்டு வந்தது.
தற்போது இந்தியா, சீனா, தாய்லாந்து மற்றும் மலேசியா போன்ற நாடுகளிலிருந்து குறைந்த அளவிலான தார் கிடைத்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்மொழியப்பட்டுள்ள அதிவேக நெடுஞ்சாலைத் திட்டங்களின் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்படும்போது, அதிகளவான தார் தேவைப்படும் என்றும், தற்போதைய விநியோக நிலைமை சவாலாக அமையக்கூடும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில், மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் பொத்துஹேர – கலகெதர பகுதி, குருணாகல் – தம்புள்ளை அதிவேக நெடுஞ்சாலை மற்றும் இங்கிரிய – இரத்தினபுரி அதிவேக நெடுஞ்சாலை ஆகிய மூன்று திட்டங்களை நிர்மாணிக்க அரசாங்கம் முன்மொழிந்துள்ளது.
உள்நாட்டு நிதி மூலம் இத்திட்டங்களை முன்னெடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ள போதிலும், நிர்மாணப் பொருட்களை இறக்குமதி செய்வதற்காக திட்டச் செலவில் 15 முதல் 20 சதவீதம் வரை ஒதுக்க வேண்டியிருக்கும் என அனுராத ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
தார் என்பது பெற்றோலிய உற்பத்தியின் ஒரு துணைப் பொருளாகும். இது பெரும்பாலும் ஈரானில் உற்பத்தி செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.




