கிரிமியா பாலம் மீதான தாக்குதல் நியாயமானதே; உக்ரைன் ஜனாதிபதி திட்டவட்டம்
உக்ரைனில் பாலங்கள் மீது ரஷ்யா மேற்கொண்ட 109 தாக்குதல்களுக்கு நியாயமான பதிலடியாக, ரஷ்யாவையும் ஆக்கிரமிக்கப்பட்ட கிரிமியாவையும் இணைக்கும் முக்கிய பாலத்தின் மீது உக்ரைன் மீண்டும் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளதாக ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
கீவ் நகரில் பிபிசிக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
கிரிமியா பாலத்தின் மீதான தாக்குதல்களைத் தொடர்ந்து உக்ரைன் மீது ரஷ்யா தீவிர தாக்குதல்களை மேற்கொண்டு வருவது குறித்து கருத்து தெரிவித்த ஜெலென்ஸ்கி, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின் போரை நிறுத்த விரும்பவில்லை என்பதற்கான சமிக்ஞையே இத்தகைய நடவடிக்கைகள் எனக் குறிப்பிட்டுள்ளார்.
“புதின் போரை நிறுத்த விரும்பவில்லை. மாறாக, போரை மேலும் தீவிரப்படுத்துவதற்கான காரணத்தைத் தேடுகிறார்” என அவர் தெரிவித்துள்ளார்.
கிரிமியா பாலம் முற்றிலும் பொதுமக்களின் பயன்பாட்டுக்கானது என்ற புதினின் கூற்றையும் ஜெலென்ஸ்கி நிராகரித்துள்ளார்.
ரஷ்யாவிலிருந்து சட்டவிரோதமாக இணைத்துக்கொள்ளப்பட்ட கிரிமியா தீபகற்பத்துக்குச் செல்லும் இந்தப் பாலம், பொதுமக்களின் போக்குவரத்துக்கு மட்டுமே பயன்படுத்தப்படுவதாக புதின் கூறியிருந்தார்.
ஆனால், அந்தப் பாலத்தின் ஊடாக ரஷ்ய இராணுவத் தளவாடங்கள், பீரங்கிகள் மற்றும் ஏனைய இராணுவ உபகரணங்கள் கொண்டு செல்லப்படுவதை இணையத்தில் வெளியாகியுள்ள படங்கள் மூலம் உறுதிப்படுத்த முடியும் என ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
“புதின் இணையத்தைப் பயன்படுத்தியிருந்தால், இதனை அவரால் பார்க்க முடியும்” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உக்ரைனில் உள்ள பாலங்களைக் குறிவைத்து ரஷ்யா ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியுள்ளதாகவும் ஜெலென்ஸ்கி சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த வாரம் நடத்தப்பட்ட ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களின் போது, கிரிமியா பாலத்தின் மத்திய பகுதியிலுள்ள வீதிப் பகுதி அழிக்கப்பட்டதுடன், அதன் ஆதரவு வளைவுகளில் ஒன்று கடலில் சரிந்து விழுந்துள்ளது. இதனால், பாலம் சேதமடைந்து வீதிப் போக்குவரத்துக்கு பயன்படுத்த முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.




