காலநிலை மாற்றம் – ஆப்பிரிக்க நாடுகளில் தீவிரமடையும் மலேரியா நோய் தொற்று
காலநிலை மாற்றத்தின் காரணமாக ஆப்பிரிக்காவில் வாழும் பெரும்பாலான மக்கள் மலேரியா தொற்றால் பாதிக்கப்படுவார்கள் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
நேச்சர் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வொன்றில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதற்கமைய தெற்கு ஆப்பிரிக்காவின் கடலோரப் பகுதிகளில் மலேரியா பாதிப்புகள் 20 சதவீதம் வரை அதிகரிக்கக்கூடும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
அதிகரித்து வரும் வெப்பநிலையால் மலேரியாவைப் பரப்பும் கொசுக்களின் பரவல், தெற்கு மற்றும் கிழக்கு ஆப்பிரிக்காவின் குளிர்ச்சியான பகுதிகளுக்கும் விரிவடையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இதன் விளைவாக, கென்யா மற்றும் எத்தியோப்பியாவின் சில பகுதிகள் உட்பட கிழக்கு ஆப்பிரிக்க உயர்நிலப்பகுதிகளிலும், அங்கோலா, சாம்பியா மற்றும் கிழக்கு தென்னாப்பிரிக்காவிலும் மலேரியா பாதிப்புகள் சுமார் 05 சதவீதத்தினால் அதிகரிக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேநேரம் ஆப்பிரிக்காவின் சில வெப்பமான பகுதிகளில் இதற்கு நேர்மாறான நிலை எதிர்பார்க்கப்படுகிறது. அங்கு நைஜீரியா, புர்கினா பாசோ மற்றும் மாலி உள்ளிட்ட நாடுகளில் நோய்ப் பரவல் சுமார் 5 சதவீதம் வரை குறையும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.




