உலகம் முக்கிய செய்திகள்

உலகின் கடல் வல்லரசாக உருவெடுக்கும் சீனா: ஆட்டம் காணும் அமெரிக்கா

உலகின் கடற்பரப்பில் நீண்டகாலமாக ஆதிக்கம் செலுத்தி வந்த அமெரிக்காவின் நிலையை மாற்றியமைக்கும் வகையில், சீனா தனது கடற்படையைப் பாரிய அளவில் விரிவுபடுத்தி வருவதாக வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் செய்தி வெளியிட்டுள்ளது.

உலகின் கடற்பரப்பில் நீண்டகாலமாக ஆதிக்கம் செலுத்தி வந்த அமெரிக்காவின் நிலையை மாற்றியமைக்கும் வகையில், சீனா தனது கடற்படையைப் பாரிய அளவில் விரிவுபடுத்தி வருவதாக வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் செய்தி வெளியிட்டுள்ளது.

நவீன வரலாற்றில் அமைதிக் காலத்தில் முன்னெடுக்கப்படும் மிகப்பெரிய கடற்படை விரிவாக்கத் திட்டங்களில் ஒன்றாக சீனாவின் இந்த நடவடிக்கை கருதப்படுகிறது.

சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கின் தலைமையில் முன்னெடுக்கப்படும் இந்த விரிவாக்கத்தின் மூலம், உலகின் மிகப்பெரிய கடற்படையைக் கொண்ட நாடாக சீனா உருவெடுத்துள்ளது.

அமெரிக்காவின் உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின்படி, சீனக் கடற்படையில் தற்போது 400க்கும் அதிகமான போர்க்கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்கள் உள்ளன. இது கப்பல்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் அமெரிக்கக் கடற்படையைவிட சுமார் 35 சதவீதம் அதிகமாகும்.

சீனாவிடம் தற்போது மூன்று விமானம் தாங்கிக் கப்பல்கள் உள்ளதுடன், நான்காவது கப்பலும் கட்டப்பட்டு வருகிறது. மேற்கத்திய பாதுகாப்புத்துறை நிபுணர்களின் கணிப்பின்படி, இந்தப் புதிய கப்பல் அணுசக்தியால் இயங்கக்கூடியதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

1998ஆம் ஆண்டு சோவியத் ஒன்றியத்துக்காக நிர்மாணிக்கப்பட்டு, உக்ரைனில் முழுமையடையாமல் கைவிடப்பட்டிருந்த ‘வர்யாக்’ (Varyag) என்ற விமானம் தாங்கிக் கப்பலை சீனா கொள்வனவு செய்திருந்தது.

சுமார் 20 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு வாங்கப்பட்ட அந்தக் கப்பலை மிதக்கும் சூதாட்ட விடுதியாக மாற்றப்போவதாக ஆரம்பத்தில் தெரிவிக்கப்பட்டது. எனினும், அது சீனாவின் உண்மையான நோக்கத்தை மறைப்பதற்கான முயற்சியாக அமைந்ததாகச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்தக் கப்பலைச் செயற்படக்கூடிய விமானம் தாங்கிக் கப்பலாக மாற்றுவதற்கு சீனாவுக்கு 15 ஆண்டுகள் தேவைப்பட்டன. ஆரம்பத்தில் சீனாவின் இந்த முயற்சியைப் பல கடற்படை ஆய்வாளர்கள் விமர்சித்திருந்தனர்.

ஆனால், தற்போது சீனாவின் கடற்படை ஆசியாவின் முக்கிய வர்த்தக மற்றும் போக்குவரத்துப் பாதைகளில் தனது பிரசன்னத்தை அதிகரித்துள்ளது.

எந்தவொரு நாளிலும் சுமார் 100 சீனக் கடற்படைக் கப்பல்கள் ஆசியாவின் முக்கிய கடல்வழிப் பாதைகளில் செயற்பட்டு வருவதாகவும், போட்டி நாடுகளுக்கு அழுத்தம் கொடுப்பதுடன் எதிர்காலத்தில் அமெரிக்காவுடனான மோதலுக்கான பயிற்சிகளிலும் ஈடுபட்டு வருவதாகவும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

உலகின் மிகப்பெரிய கப்பல் கட்டுமான நாடாக சீனா உருவெடுத்துள்ளமை அதன் கடற்படை வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

உலகளாவிய வர்த்தகக் கப்பல்களில் பாதிக்கும் மேற்பட்டவை ஆண்டுதோறும் சீனக் கப்பல் கட்டும் தளங்களில் நிர்மாணிக்கப்படுகின்றன. இந்தப் பாரிய உற்பத்தித் திறனைப் பயன்படுத்தி போர்க்கப்பல்களையும் விரைவாகக் கட்டமைத்து வருவதாக வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் தெரிவித்துள்ளது.

இதன் மூலம், உலகக் கடற்பரப்பில் அமெரிக்காவின் நீண்டகால ஆதிக்கத்துக்குச் சீனா பெரும் சவாலாக உருவெடுத்து வருவதாக சர்வதேச பாதுகாப்பு ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

Dila

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
முக்கிய செய்திகள் வட அமெரிக்கா

அமெரிக்காவில் 3 தமிழர்களுக்கு கிடைத்த கௌரவம் – பைடன் கையெழுத்து

  • April 20, 2023
அமெரிக்காவில் வாழ்நாள் சாதனையாளர் விருது 3 அமெரிக்க வாழ் தமிழர்களுக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. ஹார்வேர்ட் தமிழ் இருக்கை உள்ளிட்ட பல்வேறு தமிழ் சமூதாய பணிகளுக்காக டாக்டர். சம்பந்தம்,