போராட்டங்களால் டெல்லி வர்த்தகர்களுக்கு பொருளாதார இழப்பு
டெல்லியில் இந்தியா கூட்டணி நடத்திய பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தால் வர்த்தகர்களுக்கு சுமார் 10,000 கோடி ரூபா ழப்பு ஏற்பட்டுள்ளதாக வர்த்தக மற்றும் தொழில் சம்மேளனத்தின் (CTI) தலைவர் பிரிஜேஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
தலைமைத் தேர்தல் ஆணையர் பதவி விலக வலியுறுத்தி, நவம்பர் 1ஆம் திகதி டெல்லி ராம் லீலா மைதானத்தில் இந்தியா கூட்டணி பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தை நடத்தியது.
தீபாவளிப் பண்டிகைக் கால வர்த்தகம் பாதிக்கப்படும் என்பதால் பேரணியை ஒத்திவைக்குமாறு வர்த்தகர் சங்கங்கள் கோரிக்கை விடுத்திருந்த போதிலும், திட்டமிட்டபடி பேரணி நடைபெற்றது.
இதனால் ராம் லீலா மைதானத்தைச் சுற்றியுள்ள 20 முதல் 25 முக்கிய சந்தைகளில் சுமார் 80 சதவீதமான கடைகள் மூடப்பட்டிருந்ததாக பிரிஜேஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
மேலும், பொருட்களை ஏற்றி இறக்கும் பணிகள் முடங்கியதுடன், டெல்லியைச் சுற்றியுள்ள நகரங்களிலிருந்து வருகை தரும் சுமார் 4 இலட்சம் வாடிக்கையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களின் வருகையும் பாதிக்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், சுமார் 5,000 வாகனங்களால் பழைய டெல்லி மற்றும் மத்திய டெல்லி சந்தைகளுக்குப் பொருட்களைக் கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக வர்த்தகர்களுக்கு சுமார் 10,000 கோடி ரூபா இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, பேரணி நடத்துவதற்கு ராம் லீலா மைதானத்தைத் தெரிவுசெய்தது தவறான முடிவு என வாகன உதிரிப்பாகங்கள் வர்த்தக சங்கத் தலைவர் வினய் நரங் தெரிவித்துள்ளார்.
ஜனநாயகப் போராட்டங்களுக்கு எதிரானவர்கள் அல்ல எனக் குறிப்பிட்ட அவர், ஆசியாவின் மிகப்பெரிய வர்த்தகப் பகுதிகளில் ஒன்றான டெல்லியின் முக்கிய சந்தைகளுக்கு அருகில் பேரணி நடத்தப்பட்டதால் வர்த்தகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.




