திருமலையில் படகு பயணத் திட்டம்
திருகோணமலை மாவட்டத்தில் மொரவெவ மற்றும் பன்குளம் குளத்தில் யானைகளையும் பறவைகளையும் காணும் ஒரு நடவடிக்கையாக, படகுப் பயணத் திட்டம் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
மொரவெவ மற்றும் கோமரங்கடவல பகுதிகளில் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் திட்டத்தின் ஒரு அங்கமாக இந்த செயற்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் இன்று கருத்து வெளியிட்டுள்ள திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரொஷன் அக்மீமன, கடந்த வருடத்திலிருந்து இத்திட்டத்தினை தொடங்குவதற்கு நாங்கள் பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வந்தோம் என்றார்.
மேலும் உரையாற்றிய அவர், “திருகோணமலை கடலோரப் பகுதிக்கு மட்டுமே வரையறுக்கப்பட்டிருந்த சுற்றுலாத் துறையை மாவட்டம் முழுவதும் எவ்வாறு விரிவுபடுத்துவது என்பது குறித்து நாங்கள் ஒரு திட்டத்தை வகுத்துள்ளோம்.
ஆண்டின் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே வரையறுக்கப்பட்டிருந்த சுற்றுலாத் துறைக்கு பதிலாக, மாவட்டத்தில் ஆண்டு முழுவதும் செயல்படும் ஒரு சுற்றுலாத்
துறையை நாங்கள் உருவாக்குகிறோம்,”
அப்பகுதிகளில் எமது இளைஞர்களுக்குப் பொருளாதார வாய்ப்புகளையும் நாங்கள் உருவாக்குகிறோம். இதுவே எமது சுற்றுலாத் திட்டத்தின் இறுதி நோக்கமாகும்.
அதன்படி, நாங்கள் மொரவெவ கோமரங்கடவல சுற்றுலா கூட்டுறவுச் சங்கத்தை அமைத்துள்ளோம்” என்றார்.
இதன் போது மொரவெவ பிரதேச சபையின் தலைவர் தனுஷ்க கலுபெரும, கிழக்கு மாகாண சுற்றுலாப் பணியகத்தின் தலைவர் பிரியந்த மலவென்னகோட ஆகியோரும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.








