எதிரணிகள்மீது பாஜக தலைவர் பாய்ச்சல்
இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகள் சுமத்தி வரும் குற்றச்சாட்டுகள் குறித்து மத்திய அமைச்சரும் பா.ஜ.க தலைவருமான ஜே.பி. நட்டா கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சிகளின் “அனைத்துப் பொய்களையும்” தேர்தல் ஆணையம் அம்பலப்படுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ள அவர், எதிர்க்கட்சித் தலைவர்கள் மக்களைத் தவறாக வழிநடத்தி நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த முயல்வதாகவும் சாடியுள்ளார்.
புதுடெல்லியில் ஊடகவியலாளர்களிடம் பேசிய ஜே.பி.நட்டா,
எதிர்க்கட்சிகள் சுமத்திய குற்றச்சாட்டுகள் ஆதாரங்களுடன் பரிசீலிக்கப்பட்ட போது மீண்டும் மீண்டும் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும், தேர்தல் ஆணையம் மற்றும் நாட்டின் உச்ச நீதிமன்றம் மூலம் உண்மை வெளிவந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
“தேர்தல் ஆணையத்தின் அனைத்து உறுப்பினர்களும் அவர்களின் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்த போதிலும், எதிர்க்கட்சியினர் மீண்டும் நாட்டில் கலக்கத்தை ஏற்படுத்த முயல்கின்றனர். ராகுல் காந்தி கவனமாகக் கேட்க வேண்டும் – ஒரு பொய்யை நூறு முறை திரும்பத் திரும்பச் சொல்வதால் அது உண்மையாகிவிடாது; உண்மையை ஒருபோதும் தோற்கடிக்க முடியாது” என்று அவர் நேரடியாக ராகுல் காந்தியைச் சாடினார்.
மேலும், ராகுல் காந்தி, அரவிந்த் கெஜ்ரிவால், அகிலேஷ் யாதவ் மற்றும் மம்தா பானர்ஜி போன்ற எதிர்க்கட்சித் தலைவர்களின் அரசியல், அரசியலமைப்பு மற்றும் சுயாதீன நிறுவனங்களின் நம்பகத்தன்மையைக் கேள்விக்குள்ளாக்குவதையே மையமாகக் கொண்டு இயங்குவதாகக் குற்றம் சாட்டினார்.
பாரதிய ஜனதா கட்சிக்கு அதிகாரம் என்பது 140 கோடி மக்களுக்குச் சேவை செய்வதற்கான ஒரு ஊடகம் மட்டுமே எனக் குறிப்பிட்ட ஜே.பி. நட்டா, எதிர்க்கட்சிகள் வம்ச அரசியல் மற்றும் சுயநலத்திற்காக மட்டுமே அதிகாரத்தைத் தேடுவதாகவும், அவர்களின் இரட்டை நிலையை மக்கள் நன்கு புரிந்து கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.




