தாய்லாந்தில் 17 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்: சூத்திரதாரி கைது
தாய்லாந்தில் ‘சூட்கேஸ்’ ஒன்றிற்குள் இருந்து சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ஆஸ்திரேலிய பிரஜையொருவர் அந்நாட்டு விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணம், Ballarat பகுதியைச் சேர்ந்த சைமன் கார்மன் (Simon Carman – 45) என்பவரே, பாங்காக் நகரில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் வைத்து வெள்ளிக்கிழமை மாலை இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
வியாழக்கிழமை அதிகாலை நேரத்தில், பட்டாயா (Pattaya) நகரின் கடற்கரைச் சாலைப் பகுதியிலிருந்து துன்சனோக் தோன்ஹோம்லா (Tunchanok Donhomla – 17) என்ற சிறுமியை சைமன் கார்மன் அழைத்துச் சென்றதாக பொலிஸார்குற்றம் சாட்டியுள்ளனர்.
வெள்ளிக்கிழமை மதியம் வரை சிறுமியிடமிருந்து எந்தத் தகவலும் இல்லாததால், அவரது நண்பர்கள் பொலிஸில் முறைப்பாடு செய்தனர்.
விசாரணையைத் தொடங்கிய பொலிஸார், சிறுமி கடைசியாக சைமன் தங்கியிருந்த ஹோட்டல் அறைக்குள் சென்றதை ஆதாரங்களுடன் கண்டறிந்தனர்.
வெள்ளிக்கிழமை இரவு 11 மணியளவில், சைமன் தங்கியிருந்த ஹோட்டலில் இருந்து சுமார் 10 நிமிட பயணத் தொலைவில் உள்ள ஒரு ரயில் தண்டவாளப் பகுதிக்கு அருகே, கருப்பு நிற சூட்கேஸ் ஒன்றுக்குள் சிறுமியின் ஆடையில்லாத உடல் கண்டெடுக்கப்பட்டது.
“சிறுமியின் முகம் கொடூரமாகத் தாக்கப்பட்டு, வீக்கத்துடனும் காயங்களுடனும் காணப்பட்டது. அவரது வாய் மற்றும் மூக்கில் இருந்து இரத்தம் வழிந்திருந்தது” என பட்டாயா நகர காவல் கண்காணிப்பாளர் அனெக் சரதோங்யு (Anek Sarathongyu) தெரிவித்துள்ளார்.
பொலிஸார் ஹோட்டல் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகின.
வியாழக்கிழமை இரவு 9:34 மணியளவில், சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்ட அதே போன்ற ஒரு கருப்பு நிற சூட்கேஸுடன் சைமன் ஹோட்டலை விட்டு வெளியேறியுள்ளார்.
அந்த சூட்கேஸைத் தனது மோட்டார் சைக்கிளின் பின்னால் கட்டிக்கொண்டு அவர் ரயில் தண்டவாளப் பகுதியை நோக்கிச் சென்றுள்ளார்.
அங்கு சுமார் 9 நிமிடங்கள் கேமராவின் பார்வையில் படாமல் மறைந்திருந்த அவர், பின்னர் மீண்டும் ஹோட்டலுக்குத் திரும்பியுள்ளார்.
வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்குச் சிறுமி காணாமல் போனதாகப் புகார் அளிக்கப்பட்ட நிலையில், அடுத்த இரண்டு மணி நேரத்திற்குள் (இரவு 7 மணிக்கு) தாய்லாந்தை விட்டு தப்ப முயன்ற சைமனை பிரதான விமான நிலையத்தில் வைத்து பொலிஸார் கைது செய்து, மீண்டும் பட்டாயாவிற்கு அழைத்துச் சென்றனர்.
சைமன் இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ளார். “நான் தூங்கிக்கொண்டிருந்தபோது அவள் அறையை விட்டுச் சென்றுவிட்டாள், எனக்கு எதுவும் தெரியாது” எனக் கூறியுள்ளார்.
கொலைக் குற்றச்சாட்டின் கீழ் அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது, இக்குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளது.




