மேற்குக்கரையில் வீடுகள் இடிப்பு: இஸ்ரேலுக்கு ஹமாஸ் கடும் கண்டனம்
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக்கரையில் (West Bank) பாலஸ்தீனியர்களின் வீடுகளை இடிக்கும் இஸ்ரேலின் நடவடிக்கைக்கு ஹமாஸ் அமைப்பு தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.
ஹமாஸ் அமைப்பின் மூத்த அதிகாரி அப்துல் ரஹ்மான் ஷதீத் (Abdul Rahman Shadid) வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“இஸ்ரேலின் இந்த வீடு இடிப்பு நடவடிக்கை, பாலஸ்தீனிய மக்கள் தங்கள் சொந்த நிலத்தைப் பாதுகாப்பதிலிருந்தும், குடியேற்றவாசிகளின் பயங்கரவாதம் மற்றும் பாசிச ஆக்கிரமிப்பு இராணுவத்தை எதிர்த்துப் போராடுவதிலிருந்தும் அவர்களை ஒருபோதும் பின்வாங்கச் செய்யாது” என்று குறிப்பிட்டுள்ளார்.
நாப்ளஸ் (Nablus) நகருக்கு தென்மேற்கே அமைந்துள்ள தால் (Tal) கிராமத்தில், பாலஸ்தீனியவாசியான பரூக் ரமலான் (Farouk Ramadan) என்பவரது வீடு இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டமை, பாலஸ்தீனிய மக்களுக்கு எதிராகப் பிரயோகிக்கப்படும் “கூட்டுத் தண்டனை” (collective punishment) முறைமைக்குச் சிறந்த உதாரணம் என ஷதீத் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், வீடுகளை இழந்த குடும்பங்களுக்கு ஆதரவாக மேற்குக்கரை மக்கள் ஒன்றிணைந்து நிற்க வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
கடந்த ஜூலை 24 ஆம் திகதி தால் கிராமத்தின் மீது இஸ்ரேலியக் குடியேற்றவாசிகள் நடத்திய தாக்குதலின் போது ஏற்பட்ட மோதலில் பரூக் ரமலான் ஈடுபட்டிருந்தார். இதன் காரணமாகவே அவரது வீடு வெடிவைத்துத் தகர்க்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த மோதலில் 4 பாலஸ்தீனியர்களும் 2 இஸ்ரேலியர்களும் உயிரிழந்ததைத் தொடர்ந்து, இஸ்ரேலிய இராணுவம் மேற்குக்கரையில் தீவிர இராணுவ நடவடிக்கையை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.




