இந்திய கடவுச்சீட்டு குடியுரிமைக்கான ஆவணம் அல்ல
இந்தியக் கடவுச்சீட்டு என்பது முதன்மையாக ஒரு பயண ஆவணம் மட்டுமே என்றும், அதனை ஒரு நபரின் குடியுரிமைக்கான தீர்க்கமான ஆதாரமாகக் கருதக் கூடாது என்றும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்திய வெளிவிவகார அமைச்சின் மூத்த அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டியே இந்த தகவலை வெளியிடப்பட்டுள்ளது.
கடவுச்சீட்டு சேவைகளின் விரிவாக்கத்தைக் குறிக்கும் வகையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் எழுப்பப்பட்ட கேள்விக்கு, அந்த ஆவணத்தின் சட்டபூர்வ வரம்பை விளக்கும் போது அதிகாரி மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
“நீங்கள் வெளிநாடுகளுக்குப் பயணம் செய்யும்போது, கடவுச்சீட்டு உங்களது தேசியத்தை உறுதிப்படுத்திய போதிலும், அது உங்களது குடியுரிமைக்கான ஆவணம் அல்ல” என்று அந்த அதிகாரி தங்களின் கேள்விக்கு பதிலளித்ததாக ‘தி இந்து’ நாளிதழ் குறிப்பிட்டுள்ளது.
இந்தியத் தேர்தல் ஆணையம், வாக்காளர் பட்டியலை மறுசீரமைப்பு செய்யும் ஒரு சர்ச்சைக்குரிய பணியை மேற்கொண்டு வரும் வேளையில், வெளியுறவு அமைச்சகத்திடமிருந்து இந்த விளக்கம் வந்துள்ளது.
இந்த வாக்காளர் பட்டியல் சீரமைப்பில், வாக்காளர்கள் தங்களின் தகுதியை நிலைநாட்டுவதற்குக் குடியுரிமைக்கான சான்று உள்ளிட்ட ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.




