ஆஸ்திரேலியாவில் புலம்பெயர்வு எண்ணிக்கையை பெருமளவில் குறைக்க திட்டம்
ஆஸ்திரேலிய வரலாற்றிலேயே இல்லாத வகையில், புலம்பெயர்வோர் எண்ணிக்கையைக் கணிசமாகக் குறைக்கும் திட்டத்தை எதிர்க்கட்சியான ‘லிபரல்-நேஷனல் கூட்டணி’ (Liberal-National Coalition) அறிவித்துள்ளது.
தற்காலிக மற்றும் மனிதநேய விசாக்களைக் குறைத்து, உயர் திறன் கொண்ட தொழிலாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையிலான புதிய புலம்பெயர்வுக் கொள்கையை எதிர்க்கட்சி வெளியிட்டுள்ளது.
வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு மற்றும் வீட்டு வசதிப் பற்றாக்குறை காரணமாக ஆஸ்திரேலியாவில் புலம்பெயர்வோருக்கு எதிரான உணர்வுகள் அதிகரித்து வரும் பின்னணியில் இந்த அதிரடி அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இத்திட்டத்தின் மூலம் அடுத்த நான்கு ஆண்டுகளில் தற்காலிக விசாக்களின் எண்ணிக்கை 6,50,000 ஆகக் குறைக்கப்படும். மேலும், ஆண்டு நிகர வெளிநாட்டுப் புலம்பெயர்வு (Net overseas migration) தற்போதைய அளவிலிருந்து மூன்றில் ஒரு பங்காக, அதாவது 1,00,000 ஆகக் குறைக்கப்படும்.
செவ்வாய்க்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் அங்கஸ் டெய்லர் (Angus Taylor),
“நாங்கள் முன்வைப்பது இந்த நாட்டின் வரலாற்றிலேயே புலம்பெயர்வுக்கு எதிரான மிகப்பெரிய வெட்டு நடவடிக்கையாகும்.
இது ஆஸ்திரேலியாவிற்கும் நமது தேசிய நலன்களுக்கும் முதலிடம் அளிக்கும்” என்றார்.
மேலும் அவர் கூறுகையில், “நிகர வெளிநாட்டுப் புலம்பெயர்வு எண்ணிக்கை முதல் மற்றும் இரண்டாம் ஆண்டுகளில் 100,000 ஆகவும், நான்காம் ஆண்டில் 1,60,000ஆகவும் இருக்கும். இது வீதிகள், பள்ளிகள், கட்டமைப்பு வசதிகள் மற்றும் வீடுகள் மீதான அழுத்தத்தைக் குறைத்து, நாட்டிற்குத் தேவையான சுவாச இடைவெளியை வழங்கும்” எனக் குறிப்பிட்டார்.
முக்கிய அம்சங்கள்
மனிதநேய விசா இடங்கள் பாதியாகக் குறைக்கப்பட்டு, ஆண்டுக்கு 10,000 ஆகக் வரம்பிடப்படும்.
சர்வதேச மாணவர் சேர்க்கை 2,40,000 ஆகக் குறைக்கப்படும்.
படிப்பை முடித்த பிறகு மாணவர்கள் தங்கிப் பணிபுரிய அனுமதிக்கும் ‘தற்காலிக பட்டதாரி விசா’ (Temporary graduate visa) திட்டம் ரத்து செய்யப்படும்.
அதேவேளையில், தற்காலிகத் திறன் படைத்த தொழிலாளர்களுக்கான விசாக்கள் 1,00,000 ஆக உயர்த்தப்படுவதுடன், நிலுவையிலுள்ள கட்டுமானத் தொழிலாளர்களின் விசா விண்ணப்பங்கள் விரைந்து பரிசீலிக்கப்படும்.
ஆளும் தொழிற்கட்சியின் ஆட்சியில் திறன் சார்ந்த புலம்பெயர்வுக்குப் பதிலாக ‘கூட்டப் புலம்பெயர்வு’ (Mass migration) ஊக்குவிக்கப்பட்டதாகவும், அந்தப் போக்கை மாற்றி அமைப்போம் என்றும் டெய்லர் சுட்டிக்காட்டினார்.
கடந்த மாதம் ஆளும் தொழிற்கட்சி அரசு வெளியிட்ட அறிக்கையில், 2028-க்குள் ஆண்டு நிகரப் புலம்பெயர்வை 2,25,000 ஆகக் குறைக்க இலக்கு நிர்ணயித்திருந்தது.
எதிர்க்கட்சியின் தற்போதைய திட்டம் அதைவிடக் கடுமையான கட்டுப்பாடுகளைக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கொரோனா கட்டுப்பாடுகளுக்குப் பிறகு எல்லைகள் திறக்கப்பட்டபோது மாணவர்கள் மற்றும் தற்காலிக தொழிலாளர்களின் வருகையால் புலம்பெயர்வு கணிசமாக அதிகரித்தது. இருப்பினும், கடந்த இரண்டு ஆண்டுகளில் அது குறையத் தொடங்கியுள்ளது. 2025 ஜூன் 30 ஆம் திகதியுடன் முடிவடைந்த ஆண்டில் நிகர வெளிநாட்டுப் புலம்பெயர்வு 3,06,000 ஆகப் பதிவாகியிருந்தது.




