திறைசேரியில் இருந்து மாயமாகிய மற்றொரு தொகை! புதிய அழுத்தத்தில் அரசு!
திறைசேரியில் இருந்து 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் பணம் மாயமாகியுள்ள நிலையில், மற்றொரு பாரிய தொகை மாயமாகியிருப்பது தற்போது தெரியவந்துள்ளது.
அமெரிக்க அஞ்சல் சேவைக்குச் செலுத்தப்பட வேண்டிய சுமார் 625,000 டொலர் (சுமார் 199.7 மில்லியன் இலங்கை ரூபாய்) பணம் மாயமாகியுள்ளதாக தற்போது கண்டறியப்பட்டுள்ளது.
குறித்த பணம் வந்து சேரவில்லை என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்ததை தொடர்ந்து இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த திருட்டு சம்பவம் தொடர்பில் ஆஸ்திரேலிய அதிகாரிகள் அறிந்திருந்ததாகவும், இது முன்பு நினைத்ததை விட பரந்த அளவில் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
ஹேக்கர்கள் நாட்டின் அஞ்சல் அதிகாரசபையிலிருந்து பணத்தை “பெறுநருக்குச் செலுத்த வேண்டியதற்குப் பதிலாக, மற்ற வங்கிக் கணக்குகளுக்குத் திசைதிருப்பியுள்ளதாக திறைசேரி செயலாளர் ஹர்ஷனா சூரியப்பெரும குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையே வணிக மின்னஞ்சல் ஊடுருவல் மோசடிகள் இணையக் குற்றவாளிகளிடையே பிரபலமாக உள்ளன. கடந்த ஆண்டில் மட்டும் மின்னஞ்சல் ஊடுருவல் தாக்குதல்களால் பில்லியன் கணக்கான டொலர் இழப்புகள் ஏற்பட்டதாக FBI கூறுகிறது.
இவ்வாறான மோசடிகள் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டு வரும் நாட்டிற்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதுடன், பாதுகாப்பு குறைப்பாடுகள் அரசாங்கத்திற்கு புதிய அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.





