அடங்க மறுக்கும் அமெரிக்கா: பின்வாங்க ஈரானும் மறுப்பு! நடக்கப்போவது என்ன?
ஈரான், அமெரிக்காவுடனான போரை முடிவுக்குக் கொண்டுவர இராஜதந்திர ரீதியிலான பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க விரும்புவதாக ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார்.
எனினும், ஈரான் முன்வைக்கும் நிபந்தனைகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான இராஜதந்திர முயற்சிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், மத்தியஸ்தர்கள் ஊடாக வாஷிங்டனுக்கும் தெஹ்ரானுக்கும் இடையில் தகவல்கள் பரிமாறப்பட்டு வருவதாக அராக்சி தெரிவித்துள்ளார்.
ஈரானின் அரச செய்தித்தாளுக்கு வழங்கிய நேர்காணலில், மீண்டும் போர் ஏற்படுவதைத் தடுக்கும் வகையிலான ஒப்பந்தமொன்றை எட்டுவதே ஈரானின் நோக்கம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பேச்சுவார்த்தைகளை அடுத்த கட்டத்திற்கு முன்னெடுப்பதற்கு முன்னதாக, அமெரிக்கா உண்மையான அர்ப்பணிப்புடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுகின்றதா என்பதை உறுதிப்படுத்தும் உத்தரவாதங்கள் தேவைப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அணுசக்தி விவகாரத்தில் ஈரானின் நிலைப்பாடு
ஈரானின் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை நாட்டிற்குள் வைத்திருப்பது தமது முக்கிய நிபந்தனையாக இருப்பதாக அராக்சி தெரிவித்துள்ளார்.
இருப்பினும், ஈரானின் தேசிய நலன்களையும் தேவைகளையும் கருத்திற்கொண்டு நியாயமான தீர்வொன்றை எட்ட முடியும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
செறிவூட்டப்பட்ட யுரேனியத்தின் கையிருப்பை சர்வதேச அணுசக்தி முகமையின் (IAEA) கண்காணிப்பின் கீழ் நீர்த்துப்போகச் செய்வது உள்ளிட்ட சில முன்மொழிவுகள் முன்னதாக பரிசீலிக்கப்பட்டிருந்தன.
2025 ஜூன் மாதத்தில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தியபோது, ஈரானிடம் 60 சதவீத செறிவூட்டப்பட்ட 440.9 கிலோகிராம் யுரேனியம் இருந்ததாக சர்வதேச அணுசக்தி முகமை மதிப்பிட்டுள்ளது. எனினும், தற்போது அதில் எவ்வளவு கையிருப்பு எஞ்சியுள்ளது என்பது தெளிவாகத் தெரியவில்லை.
அணுசக்தி மூலப்பொருள் தொடர்பான விவகாரத்தில், ஈரானின் தேசிய நலன்களையும் நாட்டின் தேவைகளையும் அடிப்படையாகக் கொண்ட நியாயமான தீர்வொன்றை எட்ட முடியும் என அராக்சி தெரிவித்துள்ளார்.
வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரான் ஒப்பந்தமொன்றை எட்ட விரும்புவதாகவும், ஆனால் தமக்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒப்பந்தத்தை முன்வைக்க அந்நாடு விரும்பவில்லை என்றும் கூறியுள்ளார்.




