இனவெறித் தாக்குதல்: 3 பிரான்ஸ் பொலிஸ் அதிகாரிகளுக்கு சிறைத்தண்டனை
2020ஆம் ஆண்டு கறுப்பின இசை தயாரிப்பாளர் ஒருவரை இனவெறி அடிப்படையில் தாக்கிய வழக்கில், மூன்று பிரான்ஸ் பொலிஸ் அதிகாரிகளுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பாரிஸில் உள்ள குற்றவியல் நீதிமன்றம், பாதிக்கப்பட்ட இசை தயாரிப்பாளர் மிச்செல் செக்லரின் (Michel Zecler) வாக்குமூலத்தை நம்பகமானதாகக் கருதியதுடன், தாக்குதலில் இனவெறி ஒரு முக்கிய காரணியாக இருந்ததையும் தீர்ப்பில் உறுதிப்படுத்தியுள்ளது.
வெள்ளிக்கிழமை வழங்கப்பட்ட தீர்ப்பில், 47 வயதான செக்லர் மீதான தாக்குதல் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்ட மூன்று பொலிஸ் அதிகாரிகளுக்கும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் வன்முறை வழக்குகளில் இத்தகைய தீர்ப்பு வழங்கப்படுவது அரிதானதாகக் கருதப்படுகிறது.
2020 நவம்பர் 21ஆம் திகதி கொரோனா தொற்று பரவல் காலத்தில், பாரிஸில் உள்ள தனது இசை ஸ்டூடியோவுக்கு வெளியே செக்லர் பொலிஸ் அதிகாரிகளால் தாக்கப்பட்டார். முகக்கவசம் அணியவில்லை என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் அவரை அணுகிய அதிகாரிகள், ஸ்டூடியோவுக்குள் நுழைந்து அவரைத் தாக்கியுள்ளனர். இந்தச் சம்பவம் அங்கிருந்த கண்காணிப்பு கமராவில் பதிவாகியிருந்தது.
தாக்குதலில் செக்லரின் தலை, உதடு மற்றும் உச்சந்தலையில் காயங்கள் ஏற்பட்டதுடன், அவரது கையின் தசைநார் முற்றாக அறுந்தது. தாக்குதலின்போது இனவெறி சார்ந்த அவதூறுகள் பயன்படுத்தப்பட்டதாகவும் அவர் குற்றம் சாட்டியிருந்தார்.
தாக்குதல் தொடர்பான பொலிஸ் அறிக்கையில் அதிகாரிகள் உண்மைகளை மறைத்ததுடன், செக்லர் தங்களைத் தாக்கியதாகவும் குறிப்பிட்டிருந்தனர். எனினும், கண்காணிப்பு கமரா காட்சிகள் அவர்களின் கூற்றுகளுக்கு முரணாக இருந்ததால், நீதிமன்றம் அதிகாரிகளின் நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்கியது.
இவ்வழக்கில் அரேலியன் லாபர்சன் (Aurélien Lapersonne) என்பவருக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன், அதில் மூன்று ஆண்டுகள் ஒத்திவைக்கப்பட்ட தண்டனையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிலிப் தொன்டியூ (Philippe Tondeux) என்பவருக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அதில் மூன்றரை ஆண்டுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
பியர் பிளான்டியே (Pierre Plantier) என்பவருக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அதில் நான்கு ஆண்டுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதுடன், எஞ்சிய ஒரு வருட தண்டனையை சிறையில் அனுபவிப்பதற்குப் பதிலாக கணுக்காலில் மின்னணு கண்காணிப்பு சாதனம் பொருத்தப்பட்ட நிலையில் நிறைவேற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.
தீர்ப்பு வழங்கப்பட்ட பின்னர் நீதிமன்றத்திலிருந்து வெளியேறிய செக்லருக்கு அங்கு கூடியிருந்த மக்கள் கைதட்டி ஆதரவு தெரிவித்தனர்.
“நீதி வழங்கப்பட்டுள்ளது. இது ஒரு மனிதனின் கண்ணியத்தை மீட்டதுடன், மீண்டும் தனது வாழ்க்கையை கட்டியெழுப்புவதற்கான தொடக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது” என அவரது சட்டத்தரணி செர்ஜ் மோனி தெரிவித்தார்.
தீர்ப்பு வழங்கப்படுவதற்கு முன்னதாகவே மூன்று பொலிஸ் அதிகாரிகளும் செக்லரிடம் மன்னிப்புக் கோரியிருந்தனர். அவர்களில் பிளான்டியே மன்னிப்புக் கோரும்போது கண்ணீர் விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸ் பொலிஸில் தொடரும் இனவெறி குற்றச்சாட்டுகள்
பிரான்ஸில் பொலிஸ் வன்முறை மற்றும் இனப் பாகுபாடு தொடர்பான குற்றச்சாட்டுகள் நீண்டகாலமாக எழுந்து வருகின்றன. இத்தகைய வழக்குகளில் குற்றவாளிகளாகத் தீர்ப்பளிக்கப்படுவது அரிது என பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.




