நான் ஹிட்லரா? ஜனாதிபதி அநுரவின் சாட்டையடி பதில்
“என்னை சிலர் ஹிட்லர் எனக் கூறுகின்றனர். ஆனால், ஜனநாயகத்தை இல்லாதொழிக்கும் எந்தவொரு நாடும் ஒருபோதும் முன்னோக்கிச் செல்ல முடியாது. ஜனநாயகத்தைப் பாதுகாத்தபடியே நாம் பயணிக்க வேண்டும். எமது ஆட்சியில் ஜனநாயகம் முழுமையாகப் பாதுகாக்கப்பட்டுள்ளது” என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
கடந்த ஈராண்டுகளில் ஜனநாயக வழியில் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்கள் மீது கண்ணீர்ப்புகைத் தாக்குதலோ அல்லது நீர்தாரைப் பிரயோகமோ மேற்கொள்ளப்படவில்லை என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
அக்குரஸ்ஸ பகுதியில் நடைபெற்ற மக்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்:
“கடந்த காலங்களில் சாதாரண மக்களுக்கு எதிராக மட்டுமே சட்டம் அமுல்படுத்தப்பட்டது. அரசியல்வாதிகள் தங்களைச் சட்டத்திற்கு மேலானவர்களாகக் கருதிச் செயல்பட்டனர்.
ஆனால், தற்போது அந்த நிலைமை மாற்றப்பட்டுள்ளது. ஜனாதிபதியாக இருந்தாலும், அமைச்சராக இருந்தாலும் அல்லது சாதாரண மக்களாக இருந்தாலும் அனைவருக்கும் சட்டம் சமமானது.
கடந்த காலத்தில், ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு ஜனாதிபதி செயலகத்திற்குள்ளும், அமைச்சர்கள் அமைச்சுக்களுக்குள்ளும் முடங்கிக் கிடக்கும் நிலையே காணப்பட்டது.
இதனால் அவர்களின் கவனத்திற்கு மக்களின் பிரச்சினைகள் செல்லவில்லை. இத்தகைய சீரழிந்த அரசியல் கலாச்சாரத்தை நாம் முற்றாக மாற்றி அமைத்துள்ளோம்.
தற்போது மக்களுக்கு வாழ்க்கைச் செலவு நெருக்கடி உள்ளது என்பதை நாம் அறிவோம். அதற்காகவே, வரவிருக்கும் வரவு-செலவுத் திட்டத்தில் பல்வேறு நிவாரண முன்மொழிவுகளைச் சேர்த்துள்ளோம்.
ஊடக நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்தி, ஜனநாயகத்தை ஒழித்துவிட்டு எந்தவொரு நாடும் முன்னேற முடியாது. நாட்டில் கருத்துச் சுதந்திரமும் ஜனநாயகச் சுதந்திரமும் உறுதி செய்யப்பட்டுள்ளன.
அதேவேளை, ஊடகங்களும் தங்கள் ஜனநாயக எல்லையை மீறிப் பொறுப்பற்ற முறையில் செயல்படக் கூடாது.
மீண்டும் கூறுகிறேன், என்னை சிலர் ஹிட்லர் என்கிறார்கள். ஆனால், நாம் ஆட்சிக்கு வந்த பிறகு ஜனநாயகப் போராட்டங்கள் மீது கண்ணீர்ப்புகைத் தாக்குதலோ, நீர்தாரைப் பிரயோகமோ நடத்தவில்லை. ஜனநாயகத்தைப் பாதுகாத்தே நாம் தொடர்ந்து பயணிக்கிறோம்” என்றார்.




