இலங்கை செய்தி

சைவ சமயத்தை நெறிப்படுத்த தனிப்பீடம் அவசியம்!

சைவ சமயத்துக்கு பிணக்குகளைத் தீர்ப்பதற்கும் நெறிப்படுத்துவதற்கும் அதிகாரமுள்ள உறுதியான பீடம் அல்லது சபையொன்று உருவாக்கப்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் வலியுறுத்தினார்.

நல்லூர் திருஞானசம்பந்தர் ஆதீனத்தின் இரண்டாவது குரு மகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசார்ய சுவாமிகளின் முதலாவது குருபூசை வைபவம், சித்திரைத் திருவாதிரை நாளான இன்று (22.04.2026) புதன்கிழமை காலை நல்லை ஆதீனத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் பங்கேற்ற வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் , குரு மகா சந்நிதானத்தின் நினைவைப் போற்றும் வகையிலான ‘சிறப்பு மலரை’ உத்தியோகபூர்வமாக வெளியிட்டு வைத்துச் சிறப்புரையாற்றினார்.

அத்துடன், இந்நிகழ்வின் முக்கிய அம்சமாக மறைந்த குரு மகா சந்நிதானத்தின் திருவுருவச் சிலையும் திறந்து வைக்கப்பட்டது.

நிகழ்வில் உரையாற்றிய  ஆளுநர் மேலும் தெரிவித்ததாவது:

” யாழ்ப்பாணத்துக்கு வருகை தரும் அரசியல் தலைவர்களையும், வெளிநாட்டு இராஜதந்திரிகளையும் எமது சமயத்தின் பெயரால் சந்தித்துப் பேசுபவராக இரண்டாவது குரு மகா சந்நிதானமே திகழ்ந்தார்.

அவரின் மறைவு எமக்குப் பாரியதொரு வெற்றிடத்தையும் பின்னடைவையும் ஏற்படுத்தியுள்ளது.

ஆயினும், அந்த இடத்துக்குப் பொருத்தமான ஒருவரை இறைவன் நிச்சயம் கைகாட்டுவார் என்ற நம்பிக்கை எனக்குள்ளது. எம்மிடமுள்ள குறைகளைக் களைந்து, எதிர்காலத்தில் இந்த ஆதீனத்தை நாம் அனைவரும் இணைந்து மென்மேலும் சிறப்பாகக் கட்டியெழுப்புவோம்.

இரண்டாவது குரு மகா சந்நிதானம் அவர்கள் எவ்வித கர்வமுமற்ற, மிகுந்த நற்பண்புகள் கொண்ட ஒருவராகத் திகழ்ந்தார்.

அனைவரையும் சமமாக மதிக்கின்ற அந்தப் பண்புதான், அவர் அனைவராலும் போற்றப்படுவதற்கு முக்கிய காரணமாக அமைந்தது. அவர் தமக்கென எதையும் கோரியதில்லை. நாங்களாகவே உணர்ந்து சில வசதிகளைச் செய்து கொடுத்திருந்தோம்.

தற்காலத்தில் சமூக வலைத்தளங்களில் எவ்வித அடிப்படைகளுமின்றிப் பலருக்கும் சகட்டுமேனிக்குச் சேறுபூசுகின்றார்கள். கலாநிதி ஆறு. திருமுருகன் தொடர்பிலும் இவ்வாறான பல அவதூறுகள் அண்மையில் பரப்பப்பட்டிருந்தன.

அவர் இவ்வாறான அடிப்படையற்ற அவதூறுகளைக் கண்டு ஒருபோதும் அஞ்சக்கூடாது. எமது சமயத்துக்கு அவர் ஆற்றிவரும் அரும்பணிகளையும் இதனால் கைவிடக்கூடாது.

ஒருவர் நல்ல விடயங்களைச் செய்ய முற்பட்டால், எமது சமூகத்தவர்களே அதில் குறைசொல்லிக் கொண்டிருப்பார்கள்.

இவ்வாறு குறைசொல்பவர்கள் அல்லது சேறுபூசுபவர்கள் தாமே அந்த நற்பணிகளைச் செய்வார்கள் என்றால், நல்லது செய்பவர்கள் தாராளமாக ஒதுங்கிக் கொள்ளலாம்.

ஆனால், அவர்களும் செய்ய மாட்டார்கள்;. சமூகத்துக்காகச் செய்பவர்களையும் விடமாட்டார்கள். இது எமது சமூகத்தின் மிகப் பெரிய சாபக்கேடாகும். இதனை நாம் மாற்றியமைக்க வேண்டும், என்று தெரிவித்தார்.

இந்நிகழ்வில் சமயப் பெரியோர்கள், கல்விமான்கள் மற்றும் பெருமளவான அடியவர்கள் கலந்துகொண்டனர்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!