அயர்லாந்துக்கு அக்கினிப்பரீட்சை: முதன்முறையாக ஜனவரியில் பாகிஸ்தான் பயணம்
அயர்லாந்து கிரிக்கெட் அணி, முதல் முறையாக பாகிஸ்தானுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் விளையாடவுள்ளது.
இந்தச் சுற்றுப்பயணம் 2027ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெறவுள்ளது. இதற்கமைய, ஜனவரி 20, 22 மற்றும் 24ஆம் திகதிகளில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான மூன்று ஒருநாள் ODI சர்வதேசப் போட்டிகள் லாகூரிலுள்ள கடாபி விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளன.
அயர்லாந்து அணி ஜனவரி 9ஆம் திகதி பாகிஸ்தானைச் சென்றடையவுள்ளது. இதனைத் தொடர்ந்து, ஜனவரி 13, 15 மற்றும் 17ஆம் திகதிகளில் பாகிஸ்தான் ஷஹீன்ஸ் அணிக்கு எதிராக மூன்று பயிற்சிப் போட்டிகளில் விளையாடவுள்ளது.
2027ஆம் ஆண்டு பெப்ரவரியில் தென்னாபிரிக்கா மற்றும் நமீபியாவில் நடைபெறவுள்ள உலகக் கிண்ணத் தகுதிகாண் போட்டிகளுக்குத் தயாராகும் வகையில் இந்தச் சுற்றுப்பயணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆரம்பத்தில் பல்வேறு வகையான போட்டிகளை உள்ளடக்கிய தொடராகத் திட்டமிடப்பட்டிருந்த இந்தச் சுற்றுப்பயணம், இரு கிரிக்கெட் சபைகளின் இணக்கப்பாட்டுடன் 50 ஓவர் போட்டிகளாக மாற்றப்பட்டுள்ளது.
அயர்லாந்து ஆடவர் அணியின் பாகிஸ்தானுக்கான இந்த முதல் சுற்றுப்பயணம் இரு அணிகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
இவ்விரு அணிகளும் இதுவரை ஏழு ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் மோதியுள்ளன. அவற்றில் பாகிஸ்தான் ஐந்து போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளதுடன், அயர்லாந்து ஒரு போட்டியில் வெற்றிபெற்றுள்ளது. ஒரு போட்டி சமநிலையில் முடிவடைந்துள்ளது.




