முழங்கால் அறுவைச் சிகிச்சை; ஆஸ்திரேலிய ஓபனில் இருந்து விலகிய முன்னாள் சம்பியன்
முழங்காலில் மேற்கொள்ளப்பட்ட அறுவைச் சிகிச்சையைத் தொடர்ந்து, எதிர்வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரிலிருந்து இத்தாலிய வீரர் ஜானிக் சின்னர் விலகியுள்ளார்.
25 வயதான ஜானிக் சின்னர், மெல்பேர்ன் பார்க் மைதானத்தில் 2024 மற்றும் 2025ஆம் ஆண்டுகளில் தொடர்ச்சியாக ஆஸ்திரேலிய ஓபன் பட்டங்களை வென்றவர்.
கடந்த ஜூலை 12ஆம் திகதி விம்பிள்டன் பட்டத்தை வென்ற பின்னர், அவர் இதுவரை எந்தவொரு போட்டித் தொடரிலும் பங்கேற்கவில்லை.
முழங்காலின் வெளிப்புறத்தில் அமைந்துள்ள தசைநார் பகுதியின் (Iliotibial band) நிலையை மேம்படுத்துவதற்காக அறுவைச் சிகிச்சை செய்துகொண்டதாக, உலகத் தரவரிசையில் இரண்டாவது இடத்திலுள்ள சின்னர் செவ்வாய்க்கிழமை தனது சமூக ஊடகப் பதிவில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஆஸ்திரேலிய டென்னிஸ் சம்மேளனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆண்ட்ரூ அப்டோ தெரிவிக்கையில், சின்னரின் அணியினருடன் தொடர்ச்சியாகத் தொடர்பில் இருந்ததாகவும், அண்மையில் அவர் அறுவைச் சிகிச்சை செய்துகொண்டதைத் தொடர்ந்து ஜனவரி மாத ஆஸ்திரேலிய ஓபன் தொடரில் பங்கேற்க மாட்டார் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மெல்பேர்னில் போட்டியிடுவதை சின்னர் மிகவும் விரும்புவதாகவும், 2028ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய ஓபன் தொடரில் மீண்டும் பங்கேற்க அவர் எதிர்பார்த்துள்ளதாகவும் தெரிவித்த அவர், சின்னர் விரைவில் குணமடைந்து மீண்டும் போட்டிக்குத் திரும்ப வாழ்த்துவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
2027ஆம் ஆண்டுக்கான ஆஸ்திரேலிய ஓபன் தொடரின் பிரதான சுற்றுப் போட்டிகள் ஜனவரி 17ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளன.




