1,500 போலி வெடிகுண்டு மிரட்டல்: ‘அமெரிக்க மென்பொருள் பொறியியலாளர் ‘சென்னை விமான நிலையத்தில் கைது
2023 முதல் 2025 வரை இந்தியா முழுவதும் உள்ள விமான நிலையங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்களுக்கு 1,500-க்கும் மேற்பட்ட போலி வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல்களை (E-mails) அனுப்பிய மென்பொருள் பொறியியலாளரை , தமிழ்நாடு பயங்கரவாத தடுப்புப் படை (ATS) சென்னை சர்வதேச விமான நிலையத்தில் வைத்துக் கைது செய்துள்ளது.
கைது செய்யப்பட்டவர் திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்த சரத் சுப்பிரமணியன் சங்கர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இவர் அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள ஒரு பிரபல மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வந்த நிலையில், ‘எதிஹாட் ஏர்வேஸ்’ விமானம் மூலம் சென்னை வந்திறங்கியபோது குடியுரிமை அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டு, பின்னர் ஏடிஎஸ் (ATS) அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்.
வணிக விமானங்கள், பள்ளிகள், அண்ணா பல்கலைக்கழகம், அரசியல் தலைவர்கள் மற்றும் மூத்த காவல்துறை அதிகாரிகளைக் குறிவைத்து இவர் இந்த அநாமதேய மிரட்டல்களை விடுத்துள்ளார்.
தனது அடையாளத்தை மறைக்க VPN, டார்க் வெப் (Dark Web) மற்றும் வெளிநாட்டு சர்வர்களை இவர் பயன்படுத்தியுள்ளார்.
இருப்பினும், ஒரு மிரட்டல் மின்னஞ்சலுக்குத் தவறுதலாகத் தனது தனிப்பட்ட மெயில் முகவரியிலிருந்து பதிலளித்ததால், தமிழ்நாடு சைபர் க்ரைம் பிரிவு இவரைத் துல்லியமாக அடையாளம் கண்டது. இதனைத் தொடர்ந்து, சுமார் 6 மாத கால ரகசியக் கண்காணிப்பிற்குப் பின், பிறப்பிக்கப்பட்ட ‘லுக் அவுட்’ உத்தரவின் அடிப்படையில் இவர் கைது செய்யப்பட்டார்.
இவர் மீது தமிழ்நாடு முழுவதும் 100-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இச்சம்பவத்தில் இவர் தனித்துச் செயல்பட்டாரா அல்லது பின்னணியில் வேறு யாரேனும் உள்ளனரா என்பது குறித்துத் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.




