நாய்க்கு ராக்கி கயிறு: சர்ச்சையில் சிக்கிய நடிகை
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது.
பிரபல பாலிவுட் நடிகை கிருதி சனோன் (Kriti Sanon) நடித்துள்ள இந்த விளம்பரத்தில், சகோதரர்களின் மணிக்கட்டில் சகோதரிகள் ராக்கி கயிறு கட்டும் இந்து பண்டிகைக் கொண்டாட்டம் சித்திரிக்கப்பட்டிருந்தது.
இந்த விளம்பரத்தில் கிருதி சனோன் அரைகுறை ஆடையுடன் (Cropped top and skirt) நடித்திருப்பதாகக் கூறி, பாலிவுட் நடிகையும் பாஜக எம்பியுமான கங்கனா ரணாவத் செவ்வாயக்கிழமை கடுமையாக விமர்சித்தார்.
கிருதி சனோனின் பெயரைக் குறிப்பிடாமல் எக்ஸ் தளத்தில் பதிவிட்ட கங்கனா,
“பெண்களுக்கு உடுக்கப் பலவகையான ஆடைகள் உள்ள நிலையில், பிகினி/உள்ளாடை போன்ற உடையில் யாராவது தனது சகோதரனுக்கு ராக்கி கட்டுவார்களா? உங்களின் ஆடைத் தேர்வுகள் எங்கே போயின? இந்த விளம்பரம் திட்டமிட்டே அருவருப்பாக உருவாக்கப்பட்டது போல் தெரிகிறது” எனக் குறிப்பிட்டிருந்தார்.
மேலும், அந்த விளம்பரத்தில் கிருதி சனோன் தனது வளர்ப்பு நாய்க்கும் ராக்கி கட்டுவது போன்ற காட்சி இடம்பெற்றிருந்ததற்கும் சிலர் எதிர்ப்பைப் பதிவிட்டனர்.
இந்த விமர்சனங்களுக்கு இன்ஸ்டாகிராம் பதிவு மூலம் பதிலளித்த கிருதி சனோன்,
“பண்டிகைகளின் சாரம்சம் நீங்கள் உடுக்கும் ஆடையில் இல்லை; பாரம்பரியத்தின் மீது நீங்கள் வைத்துள்ள உணர்விலும் அர்த்தத்திலும்தான் உள்ளது. பெண்களுக்கு என்ன உடை அணிய வேண்டும் என்று சொல்வதை எப்போது நிறுத்தப் போகிறோம்?
பெண்களின் கலாச்சார மரியாதையை அவர்களின் ஆடையை வைத்து அளவிடுவதை நிறுத்த வேண்டும். கலாச்சாரமும் பாரம்பரியமும் பெண்ணின் இதயத்தில் இருக்கிறது; அவரது ஆடை அமைப்பில் (Neckline) இல்லை!” என்று காட்டமாகத் தெரிவித்தார்.
வளர்ப்பு நாய்க்கு ராக்கி கட்டுவது குறித்த விமர்சனத்திற்குப் பதிலளித்த அவர், அன்பானவர்களைப் பாதுகாப்பதே ரக்சா பந்தனின் நோக்கம் என்றும், அதில் தனது சகோதரி மற்றும் வளர்ப்பு பிராணியும் அடங்குவர் என்றும் விளக்கமளித்தார்.
கங்கனாவின் இந்த கருத்துகளுக்கு காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி உட்பட பலர் எதிர்ப்பைப் பதிவு செய்ததுடன், பெண்கள் அணியும் உடை அவர்களின் தனிப்பட்ட உரிமை என்றும், கங்கனா தேவையின்றி ஆடை பொலிசிங் (Moral policing) செய்வதாகவும் குறிப்பிட்டனர்.
விளம்பரம் வாபஸ்
இந்தச் சர்ச்சை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, ‘கிவா’ (Giva) ஆபரண நிறுவனம் புதன்கிழமை அந்த விளம்பரத்தைத் திரும்பப் பெறுவதாக அறிவித்தது.
இது குறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியங்கள் மீது நாங்கள் மிகுந்த மதிப்பும் மரியாதையும் வைத்துள்ளோம்.
சமூகத்தின் ஒருசாராரின் மனதை இந்த விளம்பரம் தற்செயலாகப் புண்படுத்தியிருந்தால், அதற்கு மன்னிப்புக் கோருவதுடன் விளம்பரத்தையும் அனைத்து ஊடகங்களிலிருந்தும் திரும்பப் பெறுகிறோம்” எனத் தெரிவித்துள்ளது.





