முஸ்லிம் நாடுகள் ஒன்றிணைய வேண்டும்: ஈரான் ஜனாதிபதி அழைப்பு
இஸ்லாமிய நாடுகளுக்கு இடையே அதிகளவிலான ஒற்றுமையும் கூட்டுறவும் அவசியம் எனக் குறிப்பிட்டுள்ள ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான், பிராந்தியத்தின் பாதுகாப்பை அனைத்து முஸ்லிம் நாடுகளும் இணைந்து கூட்டுப் பொறுப்புடன் நிர்வகிக்க வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.
மேலும், பிற நாடுகளின் தலையீட்டிற்கு இடம் தராமல், தமது பகிரப்பட்ட நலன்களை அடிப்படையாகக் கொண்டே முஸ்லிம் நாடுகள் எதிர்காலத்தை தீர்மானிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
டெஹ்ரானில் நடைபெற்ற 40-வது சர்வதேச இஸ்லாமிய ஒற்றுமை மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
“ஈரானைப் பாதுகாப்பது என்பது அண்டை நாடு அல்லது ஏனைய இஸ்லாமிய நாடுகளுக்கு எதிரான பகைமை நடவடிக்கை அல்ல.
எந்தவொரு முஸ்லிம் நாடும் தனது நிலப்பரப்பை மற்றொரு முஸ்லிம் நாட்டிற்கு எதிரான தாக்குதல் தளமாகப் பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது.
அதேபோல, ஒரு நாடு தனது பாதுகாப்பிற்காக அண்டை நாட்டின் பாதுகாப்பற்ற தன்மையை மூலதனமாக்கக் கூடாது” எனவும் ஈரான் ஜனாதிபதி கூறியுள்ளார்.
“ஒரு ஏவுகணையோ அல்லது குண்டோ வீசப்படும் போது, அது ஈரானிய தாயின் கனவிற்கும் அரபு தாயின் கனவிற்கும் இடையே எந்த வேறுபாட்டையும் பார்ப்பதில்லை; போரின் பேரழிவை ஈரான் நன்கறியும்.
ஒடுக்கப்பட்ட பாலஸ்தீன மக்களுக்கு ஈரான் கடந்த நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக அளித்து வரும் ஆதரவு ஒரு சலுகையோ அல்லது உதவியோ அல்ல, அது தார்மீகக் கடமையாகும் என்றும் ஈரான் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.




