நேபாளத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு: 8 பேர் பலி- மீட்புப் பணி தீவிரம்
திபெத் எல்லையை ஒட்டிய நேபாளத்தின் இமயமலைப் பகுதியில் ஏற்பட்ட பயங்கர திடீர் வெள்ளப்பெருக்கில் கிராமங்கள், வீதிகள், பாலங்கள் மற்றும் மின் திட்டங்கள் அடித்துச் செல்லப்பட்டதில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களை மீட்கப் புதன்கிழமை ஹெலிகொப்டர்கள் அனுப்பி வைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எல்லையின் மறுபக்கத்தில், சீனா – நேபாள இடையிலான நில எல்லையைக் சேற்றுச் சரிவு தாக்கியதில் திபெத்தின் கியிராங் (Gyirong) பகுதியில் “பெரும் உயிரிழப்புகளும்” பலர் காணாமல் போயுள்ளதாகவும் Xinhua செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
சுமார் 50,000 மக்கள் வாழும் ரசுவா (Rasuwa) மாவட்டத்தில் உள்ள சியாப்ரு பெசி (Syapru Besi) மற்றும் திமுரே (Timure) ஆகிய பகுதிகளில் வெள்ளநீர் மட்டம் மிகவும் அதிகமாக இருப்பதால் ஹெலிகொப்டர்களைத் தரை இறக்க முடியவில்லையெனத் தெரிவித்துள்ள அதிகாரிகள், உயிரிழப்புகள் அதிகரிக்கக்கூடும் எனவும் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
இது குறித்து கருத்து வெளியிட்ட மாவட்ட நிர்வாகி நரேந்திர பரியார் (Narendra Pariyar),
” Bhote Koshi ஆற்றங்கரையோர கிராமங்கள் மற்றும் கட்டமைப்புத் திட்டப் பகுதிகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. பெருமளவிலான உயிரிழப்புகளோ சொத்து இழப்புகளோ ஏற்பட்டிருக்கக் கூடும். ஆனால் தற்போதைக்கு அதை உறுதியாகக் கூற முடியாது” என்றார்.
“எரிமலை வெடிப்பது போன்ற பெரும் சத்தத்தைக் கேட்டு மக்கள் அலறியடித்துக்கொண்டு ஓடினர்” எனப் பாதிக்கப்பட்ட பகுதியைச் சேர்ந்த சாட்சி ஒருவர் தெரிவித்துள்ளார்.
சீனாவின் கியிராங் துறைமுகம் பாதிப்பு
நேபாளப் பகுதியில் ஏற்பட்ட சேற்றுச் சரிவு சீனாவின் கியிராங் துறைமுகத்தைத் தாக்கியுள்ளதாகத் தெரிவித்துள்ள சின்ஹுவா, நேபாள எல்லையை ஒட்டிய ஷிகட்சே (Shigatse) பகுதியில் வீதிகள், தொலைத்தொடர்பு மற்றும் மின்சார விநியோகம் முற்றாகத் துண்டிக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளது.
காணாமல் போனவர்களைத் தேடும் பணிகளை தீவிரப்படுத்துமாறும், இரண்டாம் கட்ட பேரழிவுகளைத் தடுக்கக் கண்காணிப்பு மற்றும் ஆரம்ப எச்சரிக்கை அமைப்புகளை வலுப்படுத்துமாறும் சீன அதிபர் ஜி ஜின்பிங் அறிவுறுத்தியுள்ளார்.
மின்சார விநியோகம் பாதிப்பு
இந்த திடீர் வெள்ளத்தால் 430 மெகாவாட் மின்சார விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதாக நேபாள எரிசக்தி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது நாட்டின் மொத்த நீர்மின் உற்பத்தியில் 12 சதவீதத்திற்கும் அதிகமாகும்.
பிராந்தியத்தில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் உதவக் காவல்துறை மற்றும் இராணுவத்தினர் மீட்புக் குழுக்களுடன் இணைந்துள்ளதாகப் பிரதமர் பலேந்திர ஷா (Balendra Shah) தெரிவித்துள்ளார். தாழ்வான பகுதிகளில் வாழும் மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
திபெத்தில் உருவாகும் போதே கோஷி ஆறு, நேபாளத்தின் திரிசூலி ஆற்றுடன் இணைந்து பின்னர் இந்தியாவின் கண்டக் (Gandak) ஆறாகப் பாய்கிறது.
கடந்த ஆண்டும் போதே கோஷி ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் 9 பேர் உயிரிழந்ததுடன் 24 பேர் காணாமல் போயிருந்தனர்.
மேலும், நேபாளத்தையும் சீனாவையும் இணைக்கும் ‘நட்புறவுப் பாலம்’ அடித்துச் செல்லப்பட்டு பல மாதங்களாகப் போக்குவரத்து மற்றும் வர்த்தகம் பாதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.





