காசாவில் தண்ணீர் பஞ்சம்: லட்சக்கணக்கானோர் பரிதவிப்பு
காசா பகுதி முழுவதும் வாழும் பெரும்பான்மையான மக்கள் குடிநீர், சுகாதாரம் மற்றும் தூய்மை பேணத் தேவையான வசதிகள் இன்றித் தவித்து வருவதாக ஐக்கிய நாடுகளின் மனிதநேய விவகாரங்களின் ஒருங்கிணைப்பு அலுவலகம் (OCHA) தெரிவித்துள்ளது.
காசாவின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் பாதியிற்கும் மேற்பட்டோர், அதாவது 1.3 மில்லியனுக்கும் அதிகமான மக்கள், குடிப்பதற்கும் , சமைப்பதற்கும் ஒரு நாளைக்கு ஒரு நபருக்கு 6 லிட்டருக்கும் (1.6 கேலன்) குறைவான நீரையே பெற முடிகிறது.
அவசரகாலச் சூழல்களில் குடிப்பது, கழுவுவது மற்றும் சமைப்பது ஆகியவற்றிற்கு ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 15 லிட்டர் (4 கேலன்) நீர் தேவை என்பது சர்வதேச மனிதநேயத் தரநிலையாகும்.
காசாவில் உள்ள மேலும் 7,00,000 மக்கள் (மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமானோர்) ஒரு நாளைக்கு ஒரு நபருக்கு 9 லிட்டருக்கும் குறைவான நீரையே பெற முடிகிறது.
இது அவர்களின் தனிநபர் சுகாதாரம், வீடுகளைத் தூய்மைப்படுத்துதல் மற்றும் குழந்தைகளின் அத்தியாவசிய தேவைகளைப் பூர்த்தி செய்யும் திறனைக் கடுமையாகப் பாதிப்பதாக OCHA சுட்டிக்காட்டியுள்ளது.
“நீர் சேகரிக்கும் இடங்களில் மக்கள் கடும் நெரிசலைச் சந்திக்கின்றனர்; அத்துடன் சேகரித்த நீரை வீடுகளுக்கு எடுத்துச் செல்லப் போதிய பாத்திரங்கள் இல்லை. இந்த வேலை பெரும்பாலும் சிறுவர்களிடமே விட்டுவிடப்படுகிறது” என்று ஐ.நா முகவாண்மை தெரிவித்துள்ளது.
மேலும், காசாவில் உள்ள குடும்பங்களில் பாதியளவு குடும்பங்களுக்கு மட்டுமே அடிப்படை சுகாதார அமைப்புகள் அல்லது தனியுரிமை கழிப்பறை வசதிகள் உள்ளன என்றும், குடியிருப்புப் பகுதிகளில் குப்பைகள் குவிந்து கிடப்பதால் 9,00,000-க்கும் அதிகமான மக்கள் நோய்த்தொற்று அபாயத்திற்கு உள்ளாகியுள்ளனர் என்றும் OCHA தெரிவித்துள்ளது.




