பயங்கரவாதத்தை ஒழிக்க எந்த எல்லைக்கும் செல்லும் இந்தியா
2016 ஆம் ஆண்டு எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு (LoC) அப்பால் இருந்த பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் நடத்திய ‘சர்ஜிகல் ஸ்டிரைக்’ (Surgical Strike) தாக்குதலைப் பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை நினைவுகூர்ந்தார்.
பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியா எப்போதும் உறுதியான மற்றும் தீர்க்கமான பதிலடியைக் கொடுக்கும் என்பதை இந்த நடவடிக்கை உலகிற்குத் தெளிவாக உணர்த்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
தனது மாதாந்த ‘மன் கி பாத்’ (Mann Ki Baat) வானொலி நிகழ்ச்சியின் 138-வது அத்தியாயத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, 2016 செப்டம்பர் 28-29 திகதிகளுக்கு இடைப்பட்ட இரவில் இந்திய வீரர்களால் மேற்கொள்ளப்பட்ட இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ராணுவ நடவடிக்கையைக் குறிப்பிட்டார்.
இது குறித்துப் பிரதமர் மோடி பேசியதாவது:
“பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் கொள்கையை உலகுக்கு வெளிப்படுத்திய ஒரு முக்கிய மைல்கல்லாக 2016-ஆம் ஆண்டின் சர்ஜிகல் ஸ்டிரைக் திகழ்கிறது.
நமது எல்லைகளையும் குடிமக்களையும் பாதுகாக்க இந்தியா எந்த எல்லைக்கும் செல்லும் என்பதை நமது ராணுவ வீரர்கள் அஞ்சா நெஞ்சத்துடன் நிரூபித்துக் காட்டினர்.
பயங்கரவாதத்தைப் பொறுத்துக்கொள்ளும் சகிப்புத்தன்மை இந்தியாவிடம் இனி இல்லை (Zero Tolerance Against Terrorism) என்பதையும், பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு இந்தியா தகுந்த பதிலடி கொடுக்கும் என்பதையும் இந்தத் தாக்குதல் உறுதிப்படுத்தியது.”
இந்திய ராணுவ வீரர்களின் இணையற்ற தைரியம், தியாகம் மற்றும் தொழில்முறைத் திறனைப் பாராட்டிய பிரதமர், நாட்டின் இறையாண்மையைப் பாதுகாப்பதில் இந்தியப் படைகள் எப்போதும் தயாராக இருப்பதாகப் பெருமிதம் தெரிவித்தார்.
2016 செப்டம்பர் 18 அன்று உரியில் உள்ள ராணுவ முகாம் மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக, எல்லைத் தாண்டிச் சென்று பயங்கரவாத முகாம்களை அழிக்கும் இந்த அதிரடித் தாக்குதலை இந்திய ராணுவம் வெற்றிகரமாக நடத்தியது குறிப்பிடத்தக்கது.




