மன்மோகன் சிங்கின் சிலை திறப்பு: ‘பாரத ரத்னா’ விருது வழங்குமாறு பரிந்துரை
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு ‘பாரத ரத்னா’ விருது வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள தெலங்கானா முதலமைச்சர் ஏ. ரேவந்த் ரெட்டி, மத்திய அரசு குறுகிய அரசியல் லாபங்களைக் கடந்து மறைந்த தலைவரைப் பெருமைப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
மேலும், மன்மோகன் சிங்கின் தொலைநோக்குப் பார்வையை முன்னோக்கி எடுத்துச் செல்ல ‘அறிவு மையம்’ ஒன்றை நிறுவ வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.
ஹைதராபாத் பைனான்சியல்மாவட்டத்தில் (Financial District) உள்ள விப்ரோ சந்திப்பில் (Wipro Circle) நிறுவப்பட்டுள்ள முன்னாள் பிரதமரின் உருவச்சிலையைத் திறந்து வைத்துப் பேசிய ரேவந்த் ரெட்டி,
இந்தச் சிலை டெல்லியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும் என்று குறிப்பிட்டார். இதுகுறித்துப் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குரல் எழுப்புமாறு தெலங்கானாவைச் சேர்ந்த அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அவர் கோரிக்கை விடுத்தார்.
சோனியா காந்தி மற்றும் மன்மோகன் சிங் ஆகியோரின் கூட்டாண்மையை, முன்னாள் பிரதமர்களான ஜவாஹர்லால் நேரு மற்றும் சர்தார் வல்லபாய் படேல் ஆகியோரின் இணைப்போடு ஒப்பிட்டுப் பேசிய அவர், தெலங்கானா மாநில உருவாக்கத்திற்கான சட்டத்தில் கையெழுத்திட்டு, பல தசாப்த கால தனி மாநிலக் கனவை நனவாக்கியவர்கள் இவர்களே என்று கூறினார்.
இந்தியாவின் அந்நியச் செலவாணி கையிருப்பு சுமார் 100 கோடி ரூபாயாகக் குறைந்து, நாடு அரசியல் நிச்சயமற்ற தன்மையை எதிர்கொண்டிருந்த காலக்கட்டத்தில், தாராளமயமாக்கல், தனியார்மயமாக்கல் மற்றும் உலகமயமாக்கல் கொள்கைகளை அறிமுகப்படுத்தி அரசியல் ஸ்திரத்தன்மையைக் கொண்டு வந்த பெருமை முன்னாள் பிரதமர் பி.வி. நரசிம்ம ராவ் மற்றும் மன்மோகன் சிங்கையே சேரும் என்று ரேவந்த் பாராட்டு தெரிவித்தார்.




