ஆட்சியை தக்கவைக்கவே ‘கைது வேட்டை’- கதறுகிறார் விமல்
கைது வேட்டை மூலமாகவே இந்த அரசாங்கம் தமது இருப்பை தக்கவைத்துக் கொண்டுவருகின்றது என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்ச குற்றஞ்சாட்டியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு ,
“அரச ஊழியர்கள் தமக்கென ஒரு வாகனம் கொள்வனவு செய்யும் யுகத்தை உருவாக்குவோம் என ஆட்சியாளர்கள் உறுதியளித்தனர். ஆனால் இன்று 20 கிலோ அரிசி கடன் தவணை அடிப்படையில் வழங்கப்படுகின்றது.
அரசாங்க ஊழியர்களே, இந்த அரசாங்கத்துக்கு தபால்மூலம் வாக்குகளை அள்ளிவழங்கினர். ஆனால் அரசாங்க ஊழியர்கள்மீது விமர்சனக்கணை தொடுக்கப்படுகின்றது.
விவசாயிகளும் வாக்களித்தனர். ஆனால் விவசாயிகள் கசிப்பு காரர்கள் என ஆளுங்கட்சியினரால் விமர்சிக்கப்படுகின்றனர்.
இந்த ஆட்சியின்கீழ் அபிவிருத்திகள் இடம்பெறவில்லை.
தம்மால் முடியாது என்பதை ஆட்சியாளர்கள் நிரூபித்துவருகின்றனர். கைது வேட்டை மூலமே தமது இருப்பை தக்கவைத்துவருகின்றனர்.”-என்றார் விமல் வீரவன்ச.




