ஸ்பெயினின் அண்டலூசியா பகுதியில் காட்டுத்தீ – களத்தில் இறங்கிய 275 வீரர்கள்
ஸ்பெயினின் தெற்கு அண்டலூசியா பகுதியில் இன்று மீண்டும் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்கும் பணியில் 275 இற்கும் மேற்பட்ட வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், தற்போது எந்தவொரு குடியிருப்புப் பகுதிக்கும் அச்சுறுத்தல் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
செவில் மற்றும் போர்த்துகீசிய எல்லைக்கு இடையில் தீ பரவியதாகவும், இதனால் சுமார் 4,000 ஹெக்டேர் பரப்பளவு சேதமாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவசரகாலப் பணிகளுக்கான இராணுவப் பிரிவைச் சேர்ந்த அறுபது வீரர்கள், 275 தீயணைப்பு வீரர்கள், 20 விமானங்கள் மற்றும் கனரக வாகனங்களின் உதவியுடன் தீ தற்போது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக அவசரக்கால சேவை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அதிக வெப்பமான வானிலை காரணமாக ஸ்பெயின் பரவலான காட்டுத்தீ அபாயத்தை எதிர்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.




