ரஷ்யாமீது புதிய தடைகள்: ட்ரம்பை சந்திக்கிறார் உக்ரைன் ஜனாதிபதி
உக்ரைனிய ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கி (Volodymyr Zelenskyy), செவ்வாய்க்கிழமையன்று வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பைச் (Donald Trump) சந்தித்துப் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரஷ்யாமீது அமெரிக்கா புதிய தடைகளை அறிவிக்கவுள்ள நிலையிலேயே இச்சந்திப்பு இடம்பெறவுள்ளது.
மறைந்த அமெரிக்க செனட்டர் லிண்ட்சே கிரகாமின் (Lindsey Graham) இறுதிச் சடங்கில் பங்கேற்கும் செலென்ஸ்கி, செவ்வாய்க்கிழமை மாலையில் செனட் சபையையும் சந்திக்கத் திட்டமிட்டுள்ளதாக இரு செனட் உதவியாளர்களை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
பல மாதங்களாக நிலுவையில் உள்ள ரஷ்யாவிற்கு எதிரான பொருளாதாரத் தடைச் சட்டத்தின் மீதான வாக்கெடுப்பும் அன்றைய தினமே நடைபெறலாம்.
இச்சட்டம் நிறைவேற்றப்பட்டால், ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் மற்றும் எரிவாயுவைக் அதிகளவில் இறக்குமதி செய்யும் சீனா, இந்தியா உட்பட ஐந்து முக்கிய நாடுகளிலிருந்து வரும் பொருட்களுக்கு 100 சதவீத சுங்கவரி (Tariffs) விதிக்கப்பட்டு, மாஸ்கோ மீதான நெருக்கடி மேலும் தீவிரமடையும்.
கடைசி நேர நடவடிக்கையாக, இதே சட்டத்தில் ஈரான் மீதான தடைகளையும் சேர்க்க டிரம்ப் முயன்றார். கடந்த வாரம் டிரம்பின் ஆதரவாளரான லாரா லூமரிடம் (Laura Loomer) பேசிய செலென்ஸ்கி, இந்த நகர்வு ஒரு “சிறந்த யோசனை” என்று தான் கருதுவதாகத் தெரிவித்துள்ளார்.
ஈரானில் இருந்து ரஷ்யாவிற்கு ட்ரோன்கள் மற்றும் ராணுவப் பாகங்களை ஏற்றிச் சென்றதாகக் கூறி, காஸ்பியன் கடலில் இருந்த ஈரானிய எண்ணெய் போர்க்கப்பல் மீது உக்ரைன் சனிக்கிழமை தாக்குதல் நடத்தியது. இதற்குப் பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரானும் சபதம் செய்துள்ளது.





