ரோஹிங்கியா இனப்படுகொலை வழக்கில் தீர்ப்பு இன்று: மியன்மார் மீது உலகின் பார்வை
மியன்மாரில் ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்றதாகக் கூறப்படும் இனப்படுகொலை தொடர்பான வழக்கில், ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச நீதிமன்றம் (ICJ) இன்று (19) தீர்ப்பு வழங்கவுள்ளது.
2017ஆம் ஆண்டு மியன்மார் இராணுவம் முன்னெடுத்த நடவடிக்கைகளில் இனப்படுகொலை இடம்பெற்றதாகக் குற்றஞ்சாட்டி, கம்பியா Gambia 2019ஆம் ஆண்டு இந்த வழக்கை சர்வதேச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.
அப்போது 7 இலட்சத்திற்கும் அதிகமான ரோஹிங்கியா மக்கள் மியன்மாரிலிருந்து வெளியேறி அண்டை நாடான பங்களாதேஷில் தஞ்சமடைந்தனர்.
மியன்மார் அரசாங்கம் இனப்படுகொலை குற்றச்சாட்டுகளை மறுத்து வரும் நிலையில், 1948ஆம் ஆண்டு இனப்படுகொலை தடுப்பு மற்றும் தண்டனை தொடர்பான சர்வதேச உடன்படிக்கையின் கீழ் மியன்மார் தனது கடமைகளை மீறியுள்ளதா என்பதை நீதிமன்றம் ஆராயவுள்ளது.
இந்தத் தீர்ப்பு ரோஹிங்கியா மக்களுக்கு நீதி கிடைப்பது தொடர்பில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுவதுடன், எதிர்காலத்தில் இடம்பெறக்கூடிய இனப்படுகொலை தொடர்பான சர்வதேச வழக்குகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், ரோஹிங்கியா அகதிகளின் பாதுகாப்பான மீள்குடியேற்றம் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பிலும் இந்த வழக்கில் கம்பியா Gambia கோரிக்கை முன்வைத்துள்ளது.




