இந்திய எண்ணெய் சந்தையில் ரஷ்யா ஆதிக்கம்: சவூதியும் முன்னேற்றம்
இந்தியாவுக்கு எண்ணெய் விநியோகம் செய்யும் நாடுகளின் வரிசையில், ஐக்கிய அரபு இராச்சியத்தைப் பின்னுக்குத் தள்ளி சவுதி அரேபியா இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. ரஷ்யா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.
கடந்த ஒக்டோபர் மாதத்தில் இந்தியாவின் சவுதி அரேபிய எண்ணெய் இறக்குமதி, எட்டு மாதங்களில் இல்லாத அதிகபட்ச அளவை எட்டியுள்ளதுடன், ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட எண்ணெயின் அளவு ஏழு மாதங்களில் இல்லாத குறைந்த மட்டத்துக்குச் சரிந்துள்ளது.
ரஷ்யா தொடர்ந்து இந்தியாவின் முதலாவது எண்ணெய் விநியோக நாடாகத் திகழ்வதாக வர்த்தகத் தரவுகள் தெரிவிக்கின்றன. அதனைத் தொடர்ந்து சவுதி அரேபியா இரண்டாவது இடத்திலும், ஐக்கிய அரபு இராச்சியம் மூன்றாவது இடத்திலும் உள்ளன.
சவுதி அரேபியாவிலிருந்து இந்தியாவுக்கான எண்ணெய் இறக்குமதி கடந்த ஒக்டோபரில் நாளொன்றுக்கு சுமார் 790,000 பீப்பாய்களாக அதிகரித்துள்ளது. அதேவேளை, ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட எண்ணெயின் அளவு நாளொன்றுக்கு 612,000 பீப்பாய்களாகக் குறைந்துள்ளது.
செங்கடல் துறைமுகமான யான்பு ஊடாக எண்ணெய் ஏற்றுமதியை அதிகரித்த சவுதி அரேபியா, சரக்கு போக்குவரத்துச் செலவுகளை ஈடுகட்ட எண்ணெய் விலையிலும் சலுகைகளை வழங்கியுள்ளது. இதன் மூலம் ரஷ்யா உள்ளிட்ட ஏனைய எண்ணெய் உற்பத்தியாளர்களுடன் போட்டியிடும் வகையில் இந்திய சந்தையில் தனது பங்களிப்பை அதிகரிக்க முயற்சித்துள்ளது.
இந்தியாவின் மொத்த எண்ணெய் இறக்குமதி கடந்த ஒக்டோபரில் நாளொன்றுக்கு 5.58 மில்லியன் பீப்பாய்களாக அதிகரித்துள்ளது. இது செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் 4.7 சதவீத அதிகரிப்பாகவும், கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 6.9 சதவீத அதிகரிப்பாகவும் அமைந்துள்ளது.
ரஷ்யாவிலிருந்து இந்தியாவுக்கான எண்ணெய் இறக்குமதி செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் 3.5 சதவீதத்தால் அதிகரித்து, நாளொன்றுக்கு 1.85 மில்லியன் பீப்பாய்களாக பதிவாகியுள்ளது. இது இந்தியாவின் மொத்த எண்ணெய் கொள்வனவில் சுமார் மூன்றில் ஒரு பங்காகும்.
மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து எண்ணெய் விநியோகத்தில் ஏற்பட்ட பாதிப்புகளைத் தொடர்ந்து, இந்திய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் ரஷ்யாவிலிருந்து இறக்குமதியை அதிகரித்திருந்தன.
இதனிடையே, இந்திய சந்தையில் அதிக பங்குகளைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையில் எண்ணெய் ஏற்றுமதிப் போட்டி தீவிரமடைந்துள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
ஏப்ரல் முதல் ஒக்டோபர் வரையான காலப்பகுதியில், ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து இந்தியாவுக்கான எண்ணெய் இறக்குமதி நாளொன்றுக்கு சராசரியாக 741,400 பீப்பாய்களாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 41.8 சதவீத அதிகரிப்பாகும்.
அதேவேளை, சவுதி அரேபியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட எண்ணெயின் அளவு 18.4 சதவீதத்தால் குறைந்து, நாளொன்றுக்கு சுமார் 484,100 பீப்பாய்களாக பதிவாகியுள்ளது.




